Published : 31 Mar 2016 10:30 AM
Last Updated : 31 Mar 2016 10:30 AM
இன்று மும்பையில் நடைபெறும் இந்திய-மே.இ.தீவுகள் அரையிறுதிப் போட்டி கெயில்/கோலி சவால் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உண்மையில் கிறிஸ் கெயிலுக்கும் அஸ்வினுக்குமான ஒரு சவாலாவகவே இந்த அரையிறுதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வரை கிறிஸ் கெய்ல்-அஸ்வின் சவாலில் அஸ்விn கை ஓங்கியிருப்பதையே புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. இதுவரை அனைத்து வகை டி20 போட்டிகளிலும் 9 இன்னிங்ஸ்களில் கெய்லை அஸ்வின் 4 முறை வீழ்த்தியுள்ளார். பவுல்டு, கேட்ச், எல்.பி., ஸ்டம்ப்டு என்று ஸ்பின்னரின் அனைத்து விக்கெட் வீழ்த்தும் சாத்தியத்திலும் கெய்லை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
கெய்ல் மரியாதை கொடுத்த ஒரு பவுலராக அஸ்வினைக் கருத இடமுண்டு, காரணம், அஸ்வினின் 70 பந்துகளில் கெயில் 57 ரன்களையே எடுத்துள்ளார். 45 பந்துகளில் சதம் காணும் அதிரடி வீரர் ஒருவர் அஸ்வினிடம் பந்துகள் அதிகம் ரன் குறைவு என்பது நிச்சயம் அஸ்வின் கெய்லுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருவதை வெளிப்படுத்துகிறது.
மேலும் சிக்சர் மன்னனான கெய்ல், அஸ்வினை இதுவரை 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களையே அடித்துள்ளார். அஸ்வின் கெய்லுக்கு ரன் எதையும் கொடுக்காத வகையில் 40 பந்துகளை வீசியுள்ளார்.
கெய்ல் நின்ற இடத்திலிருந்து விளாச்சித் தள்ளும் இயல்புடையவர் என்பதை அறிந்துள்ள அஸ்வின் அவருக்கு பந்துகளை சற்றே மெதுவாக வீசுபவர். மேலும் ஸ்டம்புக்கு நேராக ஒரு பந்தை திருப்பியும், நேராகவும் வீசுவதோடு ‘கேரம்’ பந்து என்ற ஆயுதத்தையும் அஸ்வின் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.
ஆனால், தோனி, பும்ராவை அழைத்து ரவுண்ட் த விக்கெட்டில் வீசச் செய்தால் அது உண்மையில் இந்திய அணிக்கு பெரும் துன்பத்தில்தான் முடியும், பும்ராவின் பலம் இடது கை பேட்ஸ்மென்களுக்கு ஓவர் த விக்கெட்டிலிருந்து வீசி பந்தை மார்புக்குக் குறுக்கான கோணத்தில் பந்தை செலுத்துவதே எட்ஜ் எடுக்க வாய்ப்பை உருவாக்கித் தரும். சுற்றினாலும் லீடிங் எட்ஜ் எடுக்க வாய்ப்பு. ஆனால் பும்ரா திடீரென ஓரிரு போட்டிகளில் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி ’வாங்கினார்’. இந்தத் தவறான அறிவுரை யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஏற்கெனவே ஸ்விங் இல்லாத பிட்சில் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினால் இருக்கும் கொஞ்சநஞ்ச ஸ்விங்குக்கும் ஆப்புதான் விழும். எனவே பும்ரா ரவுண்ட் த விக்கெட், கெய்ல் பேட்டிங் என்றால் இன்று சாத்துமுறையைப் பார்க்கலாம். ஓவர் த விக்கெட்டில் மேலதிகமாக ஸ்விங் ஆகும் போது அந்த ஸ்விங்கை கட்டுப்பாட்டில் வைக்கவே ரவுண்ட் த விக்கெட் உத்தி பயன்படுத்தப்படுவது வழக்கம்.
மாறாக நெஹ்ரா, அஸ்வின் என்று தோனி தொடங்குவார் என்றே கருதப்படுகிறது. கெய்லுக்கு எதிராக அஸ்வினின் ‘சக்சஸ்’ தோனி அறிந்த ஒன்றே.
நிச்சயம் தோனி, அஸ்வினை தனக்கு எதிராகக் கொண்டு வருவார் என்று கெய்லும் நம்புகிறார். ஒரு உதாரணத்திற்கு இன்று கெய்லுக்கு பேட்டிங் மாட்டிவிட்டால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அந்தச் சவாலுக்கு இலக்கைத் துரத்தும் போது தயாராக இருக்க வேண்டும், அதே போல் முதலில் பேட் செய்தால் எதிரணியில் கெய்ல் இருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகிய இருவரில் ஒருவர் சாதுரியமான அதிரடியில் இறங்க வேண்டும். ஆனால் கெய்ல் இருக்கிறார் என்ற நினைவே நம் பேட்டிங்கை குலைக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT