Published : 19 Nov 2021 01:36 PM
Last Updated : 19 Nov 2021 01:36 PM

ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு; நான் எப்போதும் ஆர்சிபிதான்: அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் விடை பெற்றார்

ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் | கோப்புப்படம்

பெங்களூரு

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வுபெற்ற ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அனைத்துவிதமான லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த ஏபி டிவில்லியர்ஸ் ஏறக்குறைய 10 சீசன்களாக அந்த அணிக்கு விளையாடியுள்ளார். 5 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் டிவில்லியர்ஸ் காரணமாக அமைந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டிவில்லியர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''எனக்கு ஆர்சிபி அணியுடனான ஐபிஎல் பயணம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவும், மிகுந்த உற்சாகத்துடனும்தான் விளையாடினேன். எனக்கு 37 வயதானாலும் எந்தவிதமான உற்சாகக் குறைவின்றிதான் களத்தில் விளையாடினேன்.

என்னுடைய குடும்பத்தினர், பெற்றோர், சகோதரர்கள், மனைவி டேனியல்லா, குழந்தைகள் தியாகம் செய்யாமல் இந்த உயரத்தை நான் அடைவது சாத்தியமில்லை. என் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். எதிர்பார்த்திருக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்த, என்னுடன் பயணித்த அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்தகுதி நிபுணர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் எனக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எனக்கு எப்போதும் கிரிக்கெட்தான் விருப்பமானது. டைட்டான்ஸ், தென் ஆப்பிரிக்க அணி, ஆர்சிபி என உலகம் முழுவதும் பல அணிகளுக்காக விளையாடியிருக்கிறேன். இதன் மூலம் கற்பனை செய்ய முடியாத அளவு அனுபவங்கள், வாய்ப்புகள் கிடைத்தன. இதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஆர்சிபி அணியுடன் நீண்டகாலம் எனக்குத் தொடர்பு இருக்கிறது. ஏறக்குறைய 11 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிவிட்டு விடைபெறுகிறேன். நீண்டகாலமாக எனது குடும்பத்தினருடன் ஆலோசித்து, அவர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தேன். ஆர்சிபி நிர்வாகம், நண்பர் விராட் கோலி, பயிற்சியாளர்கள், ஊழியர்கள், ரசிகர்கள், ஆர்சிபி குடும்பம் அனைவருக்கும் நன்றி.

ஆர்சிபி அணியுடனான பயணம் மறக்க முடியாததாக, வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ளத்தக்க பயணமாக இருந்தது. எனக்கும் குடும்பத்தாருக்கும் ஆர்சிபி எப்போதும் நெருக்கமாக இருக்கும், தொடர்ந்து ஆதரவு தருவோம். நான் எப்போதும் ஆர்சிபிக்காரர்தான்''.

இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x