Published : 15 Nov 2021 11:00 AM
Last Updated : 15 Nov 2021 11:00 AM
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார்.
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
50 பந்துகளில் 77 ரன்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு (53, 38 பந்துகள் 3 சிக்ஸர், 4 பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா இருவர் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அதிலும் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் ஹேசல்வுட் இருந்ததால், அந்த அணியில் கிடைத்த பெரிய அனுபவங்கள் அவரைச் சிறப்பாகப் பந்தவீசத் துணைபுரிந்துள்ளன.
ஹேசல்வுட் அனுபவம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''எங்களின் பந்துவீச்சுக் குழுவில் ஹேசல்வுட் முக்கியமான நபர். சிஎஸ்கே அணியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்பதை உணர்ந்து லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது என்பதை எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார்.
உண்மையில் ஹேசல்வுட் பந்துவீச்சை அடிப்பது ஆட்டத்தில் கடினமாகத்தான் இருந்தது. எங்களிடம் பல அற்புதமான, முக்கியமான தகவல்களை ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் சிறப்பாகச் செயல்பட்டது எங்களுக்கு உலகக் கோப்பை போட்டியில் உதவியது.
மிட்ஷெல் மார்ஷ் பொதுவாக 4-வது வீரராக நடுவரிசையில்தான் களமிறங்குவார். ஆனால், சவாலாக 3-வது இடத்தில் இறங்குவதாகக் கேட்டார். வேகப்பந்துவீச்சைச் சிறப்பாக ஆடும் மார்ஷ் அந்தச் சவாலையும் சிறப்பாகச் சமாளித்தார். மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் போட்டியை விரும்புவார்கள். சவால்களையும் விரும்பக்கூடியவர்கள்''.
இவ்வாறு ஆரோன் பின்ச் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT