Published : 13 Nov 2021 09:24 AM
Last Updated : 13 Nov 2021 09:24 AM

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன் ஐசியு சிகிச்சையில் பாக்.வீரர் ரிஸ்வான்: இந்திய மருத்துவர் வியப்பு

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் | கோப்புப்படம்

துபாய்


பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அரையிறுதி ஆட்டத்துக்கு முன் உடல்நலக்குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கி அரபுஅமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது.பந்துவீச்சு பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டமாக அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சிறந்த ஸ்கோரை அடைவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் முக்கியக் காரணம். அந்த ஆட்டத்தில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ரிஸ்வானின் ஆட்டம் பெரிதும் கவனிக்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் முகமது ரிஸ்வானுக்கு தீவிரமான காய்ச்சல், இருமல், மார்ப்பு இருக்கம் ஆகியவை ஏற்பட்டது.
இதனால், துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு ரி்ஸ்வான் சிகிச்சை பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரையிறுதிப் போட்டிக்கு முகமது ரிஸ்வானின் மனவலிமையைப் பார்த்து அவருக்கு சிகிச்சையளித்த இந்திய மருத்துவரே வியந்துள்ளார். துபாயில் உள்ள மீடியோர் மருத்துவமனையில்தான் முகமது ரிஸ்வான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையின் நுரையீல் சிறப்பு நிபுணர் சஹீர் சைனுலாபுதீன், முகமது ரிஸ்வானுக்கு சிகிச்சையளித்தார்.

முகமது ரிஸ்வான் மிகவிரைவாக சிகிச்சையிலிருந்து குணமடைந்து, களமிறங்கி விளையாடியது கண்டு மருத்துவர் சைனுலாபுதீன் வியந்துள்ளார்.

மருத்துவர் சஹீர் சைனுலாபுதீன் கூறுகையி்ல் “ முகமது ரிஸ்வானுக்கு மனவலிமை அதிகம். என்னுடைய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று தீவிரமான நம்பிக்கையுடன் இருந்தார். அதிலும் முக்கியமான அரையிறுதி ஆட்டம் என்பதால், அவரின் மனவலிமையின்படி தான் குணமடைந்துவிடுவேன் என்று தீவிரமாக நம்பினார், தீர்க்கமாக, வலிமையாக இருந்தார். அந்த மனவலிமையால்தான் ரிஸ்வான் வேகமாக உடல்நலன் தேறினார். அவர் விரைவாக குணமடைந்தது எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

ரிஸ்வான் மருத்துவமனைக்கு வரும்போது அவரின் மார்பில் வலி அளவு 10-10 இருந்தது இதனால், அவரின் உடல்நிலை முழுவதையும் விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்தோம். பரிசோதனையில் ரிஸ்வானுக்கு நுரையீரலில் தீவிரமான தொற்று(எஸ்பாஜியல் ஸ்பாஸம், பிரான்சோஸ்பாம்) இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த தொற்றால் ரிஸ்வானுக்கு மார்பில் திடீரென வலி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்தபின் ரிஸ்வானுக்கு தீவிரமான சிகிச்சையளித்தோம் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பாக குணமடைய வேண்டும் என்று தீவிரமாக ரிஸ்வான் நம்பினார். வழக்கமாக இந்த சிகிச்சைக்கு வருவோர் குணமடைய 5 முதல் 7 நாட்கள் தேவைப்படும்.

ஆனால், ரிஸ்வான் மனவலிமை, நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, தேசப்பற்று போன்றவற்றால் 35 மணிநேரத்தில் குணமடைந்து அரையிறுதியில் விளையாடச் செய்தது. அவரின் உடல்நலத்தை ஆய்வு செய்து புதன்கிழமை பிற்பகலில் அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்.

கிரிக்ெகட் போட்டிகள் நடக்கும்போது வீரர்கள் காயத்துடன் வருவது வழக்கம், ஆனால், நுரையீரல் தொற்றுடன் ஒருவீரர் வருவது இதுதான் முதல்முறை” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x