Published : 08 Nov 2021 08:08 AM
Last Updated : 08 Nov 2021 08:08 AM
ஷோயப் மாலிக்கின் காட்டடி அரைசதம், கேப்டன் பாபர் ஆஸமின் பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்-2 பிரிவில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி எனும் பெருமையைப் பெற்றது. அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் வரும் 11-ம் தேதி மோதல் நிகழ்த்துகிறது பாகிஸ்தான் அணி.
உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட அன்றே, பயிற்சியாளர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியிலிருந்து வக்கார் யூனுஸும் விலகினார்.
இதனால் தொடக்கமே பாகிஸ்தான் அணியில் குழப்பமாக அமைந்திருக்கிறதே என்று விமர்சிக்கப்பட்டது. அதன்பின் இடைக்காலமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பிலான்டர் பயிற்சியாளராக உலகக்கோப்பைக்கு மட்டும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு, குழப்பங்கள் அனைத்தையும் கடந்து பாபர் ஆஸம் தலைமையிலான அணி தங்களை நிரூபித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அனுபவ வீரர் ஷோயப் மாலிக் அதிரடியாக பேட் செய்து 18 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி,ஸ்ட்ரைக் ரேட் 300 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிவிரைவாக அரைசதம் அடித்தவகையில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் சாதனை வைத்திருந்தார், அதை ஷோயப் மாலிக் சமன் செய்துவிட்டார்.
கடந்த 1999ம் ஆண்டு ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகினார். இப்போது அணியில் உள்ள பல வீரர்கள் மாலிக் கிரிக்கெட் விளையாடும் போது பிறந்திருக்ககூட மாட்டார்கள் அல்லது சிறுபிள்ளைகளாக இருந்திருப்பார்கள். ஆனால், அனுபவவீரர் என்பதை தனது பேட்டிங்கில் வெளிப்படுத்தி, இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக மாலிக் நேற்று திகழ்ந்தார்.
ஷோயப் மாலிக் பேட் செய்தபோது இந்திய டென்னிஸ் வீராங்கனையும், அவரின் மனைவியுமான சானியா மிர்ஸா பார்வையாளர் வரிசையில் அமர்ந்து ரசித்தார். ஷோயப் மாலிக் சிக்ஸர் அடித்தபோது அதை கைதட்டி ஆரவாரம் செய்து ஆதரவு தெரிவித்தார்.
அணியில் இருக்கும் இரு முக்கிய மூத்த வீரர்களும் நல்ல ஸ்கோர் செய்தனர். ஒருவர் ஷோயப் மாலிக், மற்றொருவர் முகமது ஹபீஸ் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் ஆஸம் 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாபர் ஆஸம் அடிக்கும் 4-வது அரைசதம் இதுவாகும். 3-வது விக்கெட்டுக்கு முகமது ஹபீஸ், பாபர் ஆஸம் ஜோடி 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 129 ரன்கள் சேர்த்தது. ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் இருவரின் அதிரடி ஆட்டம், தொடக்கத்தில் நிதானமாக ஆடிய பாபர் ஆஸம் அரைசதம் அடித்தபின் சிக்ஸர்களை விளாசினார்.
அதிலும்கடைசி இரு ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் ஷோயப் மாலிக் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்ளிட்ட 26 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஷார்ஜா மைதானத்தில்தான் ஷோயப் மாலிக் முதன் முதலில் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபரில் மேஇ.தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார், இதே மைதானத்திலிருந்துதான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வாசிம் அக்ரம் தனது கடைசிப் போட்டியை ஆடி விடைபெற்றார். இந்த மைதானத்தில் மீண்டும் மாலிக் அரைசதம் அடித்தது சிறப்பாகும்.
190 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்பது ஸ்காட்லாந்துக்கு மிகப்பெரிய இலக்குதான். பாகிஸ்தானின் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக ஸ்காட்லாந்து விக்கெட்டுகளை இழந்து 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஸ்காட்லாந்து அணியில் ஆறுதல் அளிக்கும் விஷம் அந்த அணி வீரர் பேரிங்டன் அரைசதம் அடித்து 54 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றபடி அணியில் முன்சே(17), லீக்(14) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர் மற்றவீரர்கள் வழக்கம்போல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சதாப்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT