Published : 07 Nov 2021 11:57 AM
Last Updated : 07 Nov 2021 11:57 AM
அபு தாபியில் இன்று பிற்பகலில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றி குரூப்-2 பிரிவில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்்த்து மோதுகிறது நியூஸிலாந்து அணி.
குரூப்-2 பிரிவில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டநிலையில் இன்று நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்களுக்கு இடையிலான ஆட்டம் 2-வது அணியைத் தேர்வு செய்யும் ஆட்டமாகும்.
இந்த ஆட்டம் ஆப்கன், நியூஸிலாந்து அணிகளுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, இந்திய அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி மட்டும் வென்றுவிட்டால், டி20 உலகக் கோப்பைப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாகும்.
இப்போதுள்ள கணக்கின்படி, நியூஸிலாந்து அணி 4 போட்டிகளில் 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன், +1.277 ரன்ரேட்டில் இருக்கிறது. இந்திய அணி 4 போட்டிகளில் 2ஆட்டங்களில் வென்று 4 புள்ளிகளுடன், +1.619 ரன்ரேட்டில் நியூஸிலாந்து அணியைவிட உயர்வாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன்,+1.481 ரன்ரேட்டில் இருக்கிறது.
இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி வெல்லும்பட்சத்தில் எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை, நியூஸிலாந்து அணி அரையிறுதிக்குச் சென்றுவிடும்.
இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் பெயரளவுக்கு விளையாடிவிட்டு வெற்றியுடன் நாடு திரும்பிவிடலாம்.
ஆனால், நியூஸிலாந்து அணியை கடினமாகப் போராடி ஆப்கானிஸ்தான் அணி வென்றுவிட்டால்தான் சிலகணக்கீடுகள் வேலை செய்யும். அதாவது ஆப்கானிஸ்தான் அணி வென்றால் 6 புள்ளிகளுடன் இப்போதுள்ள ரன்ரேட்டை விட சற்று உயர்ந்திருக்கும்.
இந்திய அணி அடுத்துவரும் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் எத்தனை ஓவர்களில் ஆட்டத்தை சேஸிங்கில் வெல்ல வேண்டும், அல்லது எத்தனை ஓவருக்குள் சுருட்ட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
இந்த இலக்கிற்குள் நமிபியா அணியை இந்திய அணி வென்றுவிட்டால், ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் செல்லும். ஒருவேளை குறிப்பிட்ட இலக்கிற்குள் நமிபியா அணியை சுருட்ட முடியாவிட்டால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் செல்லும்.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி குரூப்-1 பிரிவில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் மோதும். நியூஸிலாந்து, அல்லது இந்தியா அரையிறுதிக்குச் சென்றால் மட்டுமே ஆட்டம் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். ஆப்கானிஸ்தான் ஒருவேளே தகுதி பெற்றால், இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து ெசல்வது உறுதியாகிவிடும்.
ஆதலால், இன்று நடக்கும் நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை 3 நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT