Published : 04 Mar 2016 05:19 PM
Last Updated : 04 Mar 2016 05:19 PM
புற்று நோயால் மரணமடைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் கிரேட் மார்ட்டின் குரோவின் பேட்டிங் அச்சமற்றது கலாபூர்வமானது.
மார்ட்டின் குரோவ் பேட் செய்யும் போது அவரை ஒரு பந்தாவது ‘பீட்’ செய்ய வேண்டும், திணறச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அந்தக்காலத்து அனைத்து பவுலர்களுக்கும் இருக்கும், இத்தகைய ஆவல் உள்ள பவுலர்களில் கபில், போத்தம், இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றாலும் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய பவுலர்கள் அடங்கும் நீளமான பட்டியல் அது.
கிரிக்கெட் வரலாற்றில் உத்தி ரீதியாக மிகவும் கச்சிதமான ஒரு பேட்ஸ்மென் என்றால் அது மார்ட்டின் குரோவ் ஆவார். அவரை தடுமாறச் செய்யும் பவுலர்களுக்கு களத்தில் உடனடியாக பாராட்டுதல் கிடைக்கும், ஆனால் அவர் அடிக்கத் தொடங்கினால் அந்தப் பவுலரை குறைகூறிப் பயனில்லை. ஏனெனில் அசாதாரணத் திறமைகள் படைத்த ஒரு பேட்ஸ்மென் மார்ட்டின் குரோவ் என்றால் அது மிகையான கூற்றல்ல.
வாசிம் அக்ரம் இவரைப் பற்றி ஒரு முறை கூறும்போது, “மார்ட்டின் குரோவை திணறச் செய்வதென்றால் ஒருவர் தனது அதிகபட்ச திறமையை பவுலிங்கில் வெளிப்படுத்தினால்தான் உண்டு” என்றார்.
உலகக்கோப்பைகளில் 21 போட்டிகளில் மார்டின் குரோவின் சராசரி 55 என்பது குறிப்பிடத்தக்கது.
1986-ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் புரூஸ் ரீடி பந்தை புல் ஆட முயன்று அடி வாங்கினார். ரத்தம் ஒழுக மைதானத்தை விட்டுச் சென்ற அவர், 10 தையல்களுடன் மீண்டும் களம் கண்டு சதம் அடித்தார். இது ஆஸ்திரேலியர்களையே அப்போது பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கிரீஸில் அவரது பேட்டிங் காட்டும் சவுகரியம் உண்மையில் பவுன்ஸி பிட்ச், அதில் ராட்சத வேகப்பந்து வீச்சு இதெல்லாம் உண்மையில் ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்பதை சாதாரண பார்வையாளர்கள் முதல் விவரம் அறிந்த கிரிக்கெட் வீரர்களையும் ஆச்சரியப்படுத்திய விஷயங்கள்.
ஒரு முறை முத்தரப்பு ஒருநாள் தொடரில் பெர்த் போட்டியில் (அப்போது பெர்த் பிட்சில் ஆடுவது அவ்வளவு சுலபமல்ல) இந்தியாவுக்கு எதிராக கடினமான பிட்சில், ஒரு முனையில் கபில்தேவ் நூற்றிச்சில்லரை ரன்களை வைத்துக் கொண்டு நியூஸிலாந்தை சுருட்டும் அபாயப் பந்து வீச்சை வீசிக் கொண்டிருக்கும் போது, வர்ணனையாளர் ரிச்சி பெனோ, பந்துகள் பவுன்ஸ் ஆக ஆக மார்ட்டின் குரோவ் மேலும் வலுவடைந்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம் என்றார்.
இந்தப் போட்டியில் பந்துகள் அளவுக்கதிகமாக ஸ்விங் ஆகி எழும்பிக் கொண்டிருந்தன இதனால் இந்திய அணி 113 ரன்களூக்கு சுருண்டது, இத்தகைய பிட்ச்களில் அப்போதெல்லாம் நன்றாக ஆடும் ஒரே வீரர் மொகீந்தர் அமர்நாத் மட்டுமே, இந்தப் போட்டியிலும் அமர்நாத் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இந்தப் பிட்சில் இலக்கைத் துரத்தும் போது மார்ட்டின் குரோவ் மட்டுமே ஏதோ பிட்சில் ஒன்றுமேயில்லை ஏன் இந்தியா 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது போல் ஆடினார், அவர் அவுட் ஆகும் வரை இந்திய பேட்டிங்தான் ஏதோ கோளாறுள்ளது போன்றும் பிட்ச் சாதாரணமாக் இருப்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் 77/2 என்ற நிலையில் கபில்தேவ் தனது 2-வது ஸ்பெல்லுக்குத் திரும்பிய போது ஜான் ரீட், மார்ட்டின் குரோவ், ஜெஃப் குரோவ் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்த சேத்தன் சர்மா ஹேட்லி மெக்ஸ்வீனியைக் காலி செய்ய 95/6 ஆகி பிறகு 111/7 என்று ஆனது. அதாவது மார்ட்டின் குரோவ் அதிகபட்சமாக அந்தப் பிட்சில் 33 ரன்கள் எடுத்தார். ஆனால் அந்த 33 ரன்கள் அந்தப் பிட்சில் அன்று கபில்தேவ், சேத்தன் சர்மா, ராஜர் பின்னி வீசிய பந்து வீச்சுக்கு முன்னதாக ஒரு சதத்திற்கு சமம் ஆகும். இந்தியா 20 ரன்களை அதிகம் எடுத்திருந்தால் நிச்சயம் வென்று கூட இருக்கும், ஆனால் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் மார்ட்டின் குரோவ்.
டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோரான 299 ரன்கள் 1991-ம் ஆண்டு பேசின் ரிசர்வ் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட தோல்வியிலிருந்து காப்பாற்றிய மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆகும். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்குச் சுருள, இலங்கை அணி அரவிந்த டிசில்வாவின் அற்புதமான மராத்தான் இன்னிங்சான 267 ரன்களுடன் 497 ரன்கள் குவித்தது, இந்நிலையில் 2-வது இன்னிங்சில்தான் குரோவ் இந்த 299 ரன் இன்னிங்ஸை ஆடினார். இதில் 29 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். இவரது இந்தச் சாதனையைத்தான் பிரெண்டன் மெக்கல்லம் சமீபமாக இந்தியாவுக்கு எதிராக முச்சதம் கண்டு முறியடித்தார். அப்போதெல்லாம் இலங்கையின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மிகவும் ஆக்ரோஷமாக அதே வேளையில் கற்பனை வளத்துடன் கேப்டன்சி செய்தவர், கேப்டன்சியில் இம்ரானுடன் ஒப்பிடப்பட்டவர். ரணதுங்காவின் பந்தில்தான் 299 ரன்னில் மார்டின் குரோவ் ஆட்டமிழந்தார்.
இவரது சிறந்த ஆட்டங்களில் பெரும்பாலானவை கடினமான சூழ்நிலைகளில் கடினமான பிட்ச்களில் நிகழ்ந்தவையே. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் மே.இ.தீவுகளில் அவர் எடுத்த இரண்டு 188 ஸ்கோர்கள் பல தருணங்களுக்கு இரு சான்றாக விளங்கும்.
ஒரே ஆஃப் ஸ்டம்ப் லெந்த் பந்துக்கு அவரிடம் நன்றாக பின்னால் சென்று கட் ஆடும் ஷாட்டும் இருந்தது, அதே பந்தை அனாயசமாக மிட்விக்கெட்டில் பிளிக் செய்யும் திறமையும் இருந்தது, இவையெல்லாம்தான் சச்சினுக்கு முன்னோடியாகும்.
இவருக்குப் பந்து வீசுவது, பீல்ட் அமைப்பது செஸ் ஆட்டம் போன்றதுதான். ராகுல் திராவிட் இவரிடம் குறைந்த அளவே உரையாடினாலும் நிறைய பெற்றதாக ஒரு முறை தெரிவித்ததும் குரோவ் மற்ற வீரர்களிடையே ஈர்க்கும் மரியாதைக்கு பல உதாரணங்களில் ஒரு உதாரணம் மட்டுமே.
இவரது கடைசி டெஸ்ட் போட்டியும் கடைசி ஒருநாள் போட்டியும் இந்தியாவுக்கு எதிராகவே என்பது குறிப்பிடத்தக்கது. கட்டாக் டெஸ்ட் போட்டியில் இவரது கடைசி இன்னிங்சில் 15 ரன்களையே இவர் எடுக்க முடிந்தது. காம்ப்ளியிடம் கேட்ச் கொடுத்து ஹிர்வாணியிடம் ஆட்டமிழந்தார். நாக்பூரில் நடந்த, இவர் ஆடிய கடைசி ஒருநாள் போட்டியில் மார்டின் குரோவ் 62 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். அந்த போட்டியில் 348 ரன்கள் குவித்த நியூஸிலாந்து இந்திய அணியை 39.3 ஓவர்களில் 249 ரன்களுக்குச் சுருட்டி வென்றது. ஒருநாள் தொடர் 2-2 என்று சமன் ஆனது.
மார்டின் குரோவ் என்றாலே கடினமான பிட்ச்களில் பேட்டிங் இவ்வளவு சுலபமா என்று கிரிக்கெட் ரசிகர்களையும், நிபுணர்களையும் அசத்திய ஒரு மாபெரும் பேட்ஸ்மனாகவே நமக்கு ஒரு பிம்பம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT