Published : 31 Oct 2021 01:11 PM
Last Updated : 31 Oct 2021 01:11 PM
தாயை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பாபர் ஆஸம் வெற்றி பெற்றுக் கொடுத்தார் என்று அவரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்தார்.
துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
கடந்த 1992ம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது. ஷாகீன் அப்ரிடியின் அற்புதமான பந்துவீச்சு, பாபர் ஆஸம்(68ரன்கள்), ரிஸ்வானின் மிரட்டலான பேட்டிங் போன்றவை இந்திய அணி்க்கு பெரும் சவாலாக அமைந்தன. இந்திய அணியின் வெற்றிக்கு எந்தவிதமான வாய்ப்புகளையும் தராமல் சிறப்பாக ஆடினர்.
இந்திய அணிக்கு எதிராக பாபர் ஆஸம் எந்தச் சூழலில் விளையாடினார் என்பது குறித்து அவரின் தந்தை ஆசம் சித்திக் இஸ்டாகிராமில் பதிவி்ட்டுள்ளார். பாபர் ஆஸமின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார், மரணப்படுக்கையில் தாய் இருந்தநிலையில் அதை மனதில் தாங்கிக் கொண்டு தாய்நாட்டுக்காக பாபர் ஆஸம் விளையாடியுள்ளார் என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளார்
பாபர் ஆஸமின் தந்தை ஆசம் சித்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட செய்தியில், “ என்னுடைய தேசத்துக்கு சில உண்மைகளை சொல்ல வேண்டிய நேரும் இதுவாகும். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 3 ஆட்டங்களிலும் மிகுந்த மனவேதனையோடுதான் பங்கேற்றார். அவரின் தாய் அறுவை சிகிச்சை முடிந்து மரணப்படுக்கையில், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்ததை மனதில் தாங்கிக்கொண்டு விளையாடினார்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் ஆஸம் விளையாடும்போது, எங்கள் வீட்டில் மிகப்பெரிய பரிட்சை நடந்தது. பாபரின் ஆட்டத்தைக் கவனிப்பதா, உயிருக்குப் போராடும் அவரின் தாயைக் கவனிப்பதா என சோதிக்கப்பட்டோம்.
பாபர் கடந்த 3 போட்டிகளிலும் மிகுந்த வேதனையுடன் விளையாடினார். வீட்டுக்கு வந்து அவரின் தாயைச் சந்திக்க பாபர் தயாராக இல்லை. இப்போது கடவுளின் ஆசியால் பாபர் ஆஸமின் தாய் ஆபத்தான கட்டத்தை கடந்துவி்ட்டார்.
எந்த பதிவின் நோக்கம் எங்கள் நாட்டின் ஹீரோக்களை எந்த காரணம் கொண்டும் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்பதற்காகத்தான். சில நல்ல நிலைக்கு வர வேண்டுமென்றால் சில பரிட்சைகளை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு சித்திக் தெரிவி்த்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT