Last Updated : 28 Oct, 2021 08:39 AM

 

Published : 28 Oct 2021 08:39 AM
Last Updated : 28 Oct 2021 08:39 AM

தோனி முன்னிலையில் ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் பந்துவீசிப் பயிற்சி; நியூஸி. போட்டிக்கு முழு உடற்தகுதி

பந்துவீசிப் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா | படம் ஏஎன்ஐ

துபாய்


தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் பந்துவீசாமல் தவிர்த்துவந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் நேற்று பந்துவீசி தோனி முன்னிலையி்ல் பயிற்சியில் ஈடுபட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டையில் பந்துபட்டதால், காயமடைந்திருப்பாரோ என்ற அச்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த காயமும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து வரும் 30ம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் 30ம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்வா சாவா என்ற ரீதியில் இருக்கும் இந்த ஆட்டத்தில் வென்றால்தான் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்லும் இல்லாவிட்டால், போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

இந்திய அணியில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்திக் பாண்டியா தொடர்வது அணிக்குள் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவியது. இதையடுத்து, அவரை பந்துவீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது

ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, ஒரு போட்டியில்கூட ஒருஓவர் கூட பந்துவீசவில்லை. இந்தச் சூழலில் அணியில் கூடுதலாகப் பந்துவீச்சாளரைச் சேர்ப்பதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களை வீசினால் அணியில் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்கத் தேவையில்லை என்ற ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவை பந்துவீச பயிற்சி அளிக்கப்பட்டது.

அணியின் மென்ட்டர் தோனி முன்னிலையில், உடற்பயிற்சி வல்லுநர் நிதின் படேல், பயிற்சியாளர் சோகும் தேசாய் ஆகியோர் முன்னிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மென்ட்டர் தோனி ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஹர்திக் பாண்டியா பந்துவீசி பயிற்சி எடுத்தார். இது தவிர பந்துவீசிப் பயிற்சி எடுத்து முடித்ததும், ஹர்திக் பாண்டியாவுக்கு பந்தை எறிந்து பயிற்சி எடுத்தலும் அளிக்கப்பட்டது.

முழுமையான உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பெரும் வியப்பையும், கேள்வியையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசமாட்டார் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாகவே அக்ஸர் படேலை நீக்கிவிட்டு, ஷர்துல் தாக்கூரை அணி நிர்வாகம் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x