Published : 25 Oct 2021 02:46 PM
Last Updated : 25 Oct 2021 02:46 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அதிகமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்.
50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.
அதிலும் ஷாகீன் அப்ரிடியின் அற்புதமான பந்துவீச்சு, பாபர் ஆஸம், ரிஸ்வானின் மிரட்டலான பேட்டிங் போன்றவை இந்திய அணிக்குப் பெரும் சவாலாக அமைந்தன. இந்திய அணியின் வெற்றிக்கு எந்தவிதமான வாய்ப்புகளையும் தராமல் சிறப்பாக ஆடினர்.
பாகிஸ்தானின் இந்த ஆட்டத்தைப் பார்த்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன், இந்த ஆண்டு டி20 சாம்பியன் பட்டம் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார்.
ஷேன் வார்ன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் என்ன பிரமாதமாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக அற்புதமான வெற்றி பெற்றதால், இந்த ஆண்டு டி20 சாம்பியன் என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணிதான். அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக, ஈர்க்கும் வகையில் செயல்பட்டனர். அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் என உலக அளவில் அனைத்துத் தரப்பின் மதிப்பை பாபர் ஆஸம் பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
100 கோடி பேர்
இதற்கிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன், இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நேற்றைய ஆட்டத்தில் உலகம் முழுவதும் 100 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்துக் குறிப்பிட்ட பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் ஆண்டுதோறும் பொதுவான இடத்தில் 3 டி20 போட்டிகளில் மோத வேண்டும். இதற்காக 5 நாட்களை ஒதுக்கலாம். இரு அணிகளிலும் தலா 15 வீரர்கள். போட்டியின் பரிசுத் தொகை 1.50 கோடி அமெரிக்க டாலர்களை வெற்றி பெறும் அணிக்கு பரிசாக நிர்ணயிக்கலாம். போட்டியை நடத்தும் நாடுகள், நகரங்கள், ஒளிபரப்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் வரிசை கட்டி நிற்பார்கள் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT