Published : 23 Oct 2021 03:07 PM
Last Updated : 23 Oct 2021 03:07 PM
இந்தியாவுக்கு எதிராகக் கடந்த கால உலகக் கோப்பைகளில் ஏற்பட்ட தோல்விகளை விட்டுத் தள்ளுங்கள், நாளை நடக்கும் ஆட்டத்தைப் பாருங்கள், வரலாறுகள், சாதனைகள் உடைக்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் நம்பிக்கை தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. கடந்த 2007-ம் ஆண்டு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அது முதல் இதுவரை டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதாக வரலாறு இல்லை.
இந்நிலையில் இரு அணிகளும் நாளை குரூப்-2 பிரிவில் முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் போட்டியாக அமையும். அந்த வகையில் நாளை நடக்கும் இந்த ஆட்டத்தைக் காண உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம். எங்களின் பலம் பந்துவீச்சுதான். எந்த அணியையும் பந்துவீச்சால் வீழ்த்திவிடுவோம். மிகப்பெரிய போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விடப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அந்த வகையில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் அதிகமாகப் பங்கேற்ற அனுபவம் இருக்கிறது.
எப்போதுமே நான் எளிமையாக இருக்கும் விஷயத்தில்தான் கவனம் செலுத்துவேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடுவேன். ஒவ்வொரு பந்தையும் நிதானமாக ஆடுவேன்.
கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம். பயிற்சிப் போட்டியில் வென்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். கடந்த கால வரலாறுகள், சாதனைகள் மாற்றப்படும். எங்களின் சிறந்த கிரிக்கெட்டை வழங்குவோம். 12 வீரர்களை முடிவு செய்துள்ளோம். இதில் 11 வீரர்கள் நாளை தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து வீரர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். வீரர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கிறோம். நாளை போட்டி நடக்கும் நாளில் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதுதான் கேள்வி. எங்களிடம் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடுவோம்.
கடந்த காலத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததைப் பற்றி நினைக்கவில்லை. வரலாற்றையும், சாதனையையும் மாற்றி எழுதலாம். எங்களின் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தவோம். இது உலகக் கோப்பை போட்டி என்பதால், எந்தப் போட்டியையும் எளிதாக எடுக்க முடியாது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என மூன்று அடிப்படையான அம்சங்களில் கவனம் செலுத்தி சிறப்பாகச் செயல்பட வேண்டும். என் பந்துவீச்சாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது''.
இவ்வாறு பாபர் ஆஸம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT