Published : 19 Oct 2021 04:41 PM
Last Updated : 19 Oct 2021 04:41 PM
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டியின் பிரதான சுற்று வரும் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் இரு பவுண்டரிகள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 2-வது பயிற்சி ஆட்டம் நாளை அபுதாபியில் இந்திய அணிக்கு எதிராக நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ப்ளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்ய இந்திய அணிக்கு இந்தப் பயிற்சி ஆட்டங்கள் உதவும். இந்திய அணி முதல் ஆட்டமே பாகிஸ்தான் அணியுடன் மோத இருப்பதால், மிகுந்த கவனத்துடன் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்யும்.
இதில் ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மார்கஸ் ஸ்டாய்னிஷ் காயம் காரணமாக 2-வது சுற்றில் கடைசி ஒரு போட்டியில் மட்டும்தான் களமிறங்கினார். மற்ற எந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை.
கடைசிப் போட்டியில் களமிறங்கியும் கொல்கத்தா அணிக்கு எதிராக பெரிதாக ஸ்கோர் செய்யாமல் போல்டாகி ஸ்டாய்னிஷ் ஆட்டமிழந்தார். ஆனால், நேற்றைய நியூஸிலாந்து அணிக்கு எதிராக பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடிய ஸ்டாய்னிஷ் 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், ஆனால், அவர் பந்துவீசவில்லை.
ஆனால், நாளை இந்தியாவுக்கு எதிராக நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்இன்போ தளத்துக்கு ஸ்டாய்னிஷ் அளித்த பேட்டியில், “என்னுடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது. சிறப்பாக உணர்கிறேன். இப்படியே இருந்தால், நான் களிமிறங்கத் தயார். அடுத்த பயிற்சி ஆட்டத்திலும் பந்துவீச முடியும்” எனத் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வரும் சனிக்கிழமை சந்திக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றது கிடையாது. வரும் 30-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பரம வைரியான இங்கிலாந்து அணியை துபாய் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 6-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியுடனும் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT