Last Updated : 17 Oct, 2021 04:21 PM

 

Published : 17 Oct 2021 04:21 PM
Last Updated : 17 Oct 2021 04:21 PM

தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக வந்தது வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்: விராட் கோலி உற்சாகம்

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் தோனி, கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

துபாய்

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டிருப்பது அணியில் உள்ள வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் முறைப்படி இன்று தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை நடக்கின்றன. இதில் 24ம் தேதி நடக்கும் முதல் பிரதானச் சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் அனுபவம், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்தது.

இந்நிலையில் ஐசிசி சார்பில் கேப்டன்களுக்கான நேர்காணலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார்.அப்போது இந்திய அணிக்கு தோனி மென்ட்டராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு கோலி அளித்த பதிலில் கூறியதாவது:

மிகப்பெரிய அனுபவம்தான் தோனி. எங்கள் அணிக்குள் மீண்டும் தோனி வருவதே மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும். இந்த உலகக் கோப்ைபக்கு மட்டுமல்ல எப்போதுமே தோனி எங்களுக்கு ஆலோசகர்தான். நாங்கள் இந்திய அணிக்குள் வந்ததில் இருந்து, இப்போதுவரை தோனி தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எங்களுக்கு ஆலோசகராகவே இருந்து வருகிறார்.

குறிப்பாக இளம் வீரர்கள், கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருப்போருக்கு, தோனியுடன் கலந்துரையாடல் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

தோனியின் அறிவுரைகள், ஆலோசனைகள், நுணுக்கங்கள் போன்றவை போட்டி செல்லும் பாதையை மாற்றிவிடும், எங்களையும் உயர்த்திக் கொள்ள முடியும். எந்த அணிக்கும் தோனி கேப்டனாக இருந்தாலும், அவரால் வித்தியாசத்தை புகுத்த முடியும். தோனி அணிக்குள் வருவது உண்மையில் வீரர்களுக்கும், சூழலுக்கும் உற்சாகத்தை அளிக்கும். அணி வீரர்களின் நம்பிக்கைக்கு உண்மையில் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்

கடந்த 2016ம் ஆண்டு உலகக் கோப்பை எங்களுக்கு மோசமானதாக இருந்தது, உலகக் கோப்பை வெல்லும் அணியாக கணிக்கப்பட்டும் முடியவில்லை. கடந்த 2014ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக நாங்கள் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தோம்.

இந்த முறை ஏராளமான இளம் வீரர்கள் அணிக்குள் வந்துள்ளார்கள், போட்டியின் முடிவை எந்த நிலையிலும் மாற்றும் திறமை படைத்தவர்கள். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். வலிமையான அணியாக இருப்பதாக உணர்கிறோம்

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x