Last Updated : 17 Oct, 2021 03:49 PM

1  

Published : 17 Oct 2021 03:49 PM
Last Updated : 17 Oct 2021 03:49 PM

அஸ்வினுக்கு டி20 உலகக் கோப்பை அணியில் வாய்ப்புக் கிடைத்தது எப்படி?  பாகிஸ்தானுடன் மோதல் எப்படி இருக்கும்? விராட் கோலி விளக்கம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரவிச்சந்திர அஸ்வின் | கோப்புப்படம்

துபாய்


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தது எப்படி என்பது குறித்து கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பெற்ற அஸ்வின் அதன்பின் இந்திய ஒருநாள், டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் திடீரென 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

அஸ்வினுக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்புக் கிடைத்தது குறித்தும், இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்தும் ஐசிசி சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:

அஸ்வினின் திறமைக்கு கிடைத்த பரிசுதான் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அஸ்வின் அவருடைய பந்துவீச்சை சிறப்பாக முன்னேற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக அஸ்வினின் பந்துவீச்சை கவனித்தால், தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராகக் கூட அஸ்வின் சிறப்பாகபந்துவீசியுள்ளார்.

போட்டியின் பந்தை சரியான லைன் லென்த்தில் வீசுவதற்கும், ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி பேட்ஸ்மேன்களை திணறவைக்கவும் அஸ்வின் தவறுவதில்லை. அஸ்வினுக்கு அவரின் திறமை மீது அதிகமான நம்பிக்கையிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசியதாலும், வெள்ளைப்பந்துகளில் அஸ்வினின் சிறப்பாக இருந்ததாலும் அவருக்கு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நேரத்தில் அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராகத்தான் இருந்தார், ஆனால், இடையில் அவரின் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், அதேசமயம், விரல்களில் சுழற்பந்துவீசுபவர்கள் தேவை என்பதால் அஸ்வின் சேர்க்கப்பட்டார். அஸ்வினின் அனுபவம், திறமையும் அவர் அணிக்குள் வரக்காரணம்.

யஜுவேந்திர சஹலை தவிர்த்துவிட்டு, ராகுல் சஹரை எடுத்தது சவாலான முடிவுதான். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சஹர் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். சற்று கூடுதல் வேகத்துடன் பந்துவீசும் சஹர் இலங்கை, இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டதைக் காண முடிந்தது. சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் சஹர் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளம் மெதுவானது, பல நேரங்களில் பந்து பேட்ஸ்மேனை நோக்கி தாழ்வாக வரும். அந்த நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் சற்று கூடுதலாக வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும்தொந்தராவாக இருக்கும். அந்த வகையி்ல் சஹரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். அதனால்தான் யஜுவேந்திர சஹலுக்கு பதிலாகசஹர் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுடனான முதல் போட்டி குறித்து தனிப்பட்டரீதியில் அனுபவத்தை பேச முடியும். அனைத்துப் போட்டிகளையும் எவ்வாறு அணுகுகிறோமோ அதைபோலத்தான் இதையும் அணுகுவோம். ஆனால்,இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு கட்டமைக்கப்படுகிறது எனக்குத் தெரியும். அதிகமான டிக்கெட் விற்பனையாகும். தற்சமயம், டிக்கெட் விலையும் அதிகமாக இருக்கும். நான் விளையாட்டைவிட்டு வேறு எதையும் யோசிக்கவில்லை. கிரிக்கெட்டை சரியான திசையில் விளையாட முயற்சிப்போம்

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x