Last Updated : 14 Oct, 2021 03:51 PM

 

Published : 14 Oct 2021 03:51 PM
Last Updated : 14 Oct 2021 03:51 PM

ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பொறுப்பு? இந்திய அணிக்கு உதவியாக உம்ரான், வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு

ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்

புதுடெல்லி

டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசப் போவதில்லை. அவருக்குப் புதிய ரோல் அதாவது ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷிங் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் எந்தப் போட்டியிலும் இதுவரை சரிவரப் பந்து வீசியதில்லை. ஆஸ்திரேலியத் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாத நிலையில் ஏன் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தபின் சில போட்டிகளில் பந்து வீசினார். இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோதும், ஹர்திக் பாண்டியா சில போட்டிகளில் மட்டுமே பந்து வீசினார்.

ஆனால், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. பேட்டிங்கிலும் சரிவர சோபிக்கவில்லை. இதனால், ஐபிஎல் சீசன் முழுவதுமே அவுட் ஆஃப் ஃபார்மிலேயே வந்து, அதோடு வெளியேறிவிட்டார்.

உடற்தகுதியில்லாமல் தவிக்கும் ஹர்திக் பாண்டியா டி20உலகக் கோப்பை போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றால், கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருக்காகத்தான் சேர்க்கப்படுவார். ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார், பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதுவிதமான பாத்திரத்தை வழங்க பிசிசிஐ, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து இந்திய அணி வட்டாரங்கள் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா இன்னும் 100 சதவீதம் உடற்தகுதி பெறவில்லை. ஆதலால், பந்துவீச முடியாது. ஆனால் அவரின் அனுபவத்தைப் பயன்படுத்த முடியும். கடினமான, நெருக்கடியான சூழலில் போட்டியை எளிதாக பேட்டிங் மூலம் முடித்துக் கொடுக்கும் திறமை பாண்டியாவுக்கு இருக்கிறது.

ஆதலால், இந்த உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற கணக்கில் போட்டியை ஃபினிஷிங் செய்யும் வீரராகவே களமிறங்குவார். ஹர்திக் பாண்டியா உடல்நிலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இப்போதுள்ள சூழலில் ஹர்திக் பாண்டியாவை பேட்ஸ்மேனாக மட்டுமே அணி நிர்வாகம் பார்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தோனி செய்த ஃபினிஷிங் பணியைத்தான் உலகக் கோப்பையில் ஹர்திக் செய்யப் போகிறார். ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதி பெற்றால் நிச்சயமாக பந்துவீச்சிலும் ஈடுபடுத்தப்படுவார்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து அக்ஸர் படேல் நீக்கப்பட்டுக் காத்திருப்பு வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். காத்திருப்பு வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சஹர், அக்ஸர் படேல் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு உதவியாக ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்சல் படேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரன் சர்மா, ஷாபாஸ் அகமது, கே.கவுதம் ஆகியோர் இந்திய அணியின் பயோ-பபுளில் இணைகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x