Published : 14 Oct 2021 02:13 PM
Last Updated : 14 Oct 2021 02:13 PM
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை இந்திய அணியை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரும் 18ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. வரும் 24ம் தேதி நடக்கும்முதல் பிரதான ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதாக வரலாறு கிடையாது.
ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 7 முறை இந்திய அணியுடன் மோதி 7 முறையும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 முறை மோதி 4 போட்டிகளில் பாகி்ஸ்தான் தோற்றுள்ளது.ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. ஆதலால் இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்திய அணியைத் தோற்கடிப்போம் என கூறிக்கொண்டு பாபர் ஆஸம் தலைமையிலான அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியை உலகக் கோப்பையில் வீழ்த்தினால் பலவிதமான பரிசுகளும் அந்நாட்டு வீரர்களுக்கு அறிவி்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் லாகூரில் கேப்டன் பாபர் ஆஸம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் விளையாடி வருகிறோம். ஒவ்வொரு ஆடுகளத்தின் தன்மைகுறித்தும் எங்களுக்கு நன்கு தெரியும். ஆடுகளங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் எவ்வாறுமாறுபடும், அதற்கு ஏற்றார்போல் பேட்ஸ்மேன்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறி்த்தும் நன்கு தெரியும்.
போட்டி நடக்கும் நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெல்லும். என்னிடம் கேட்டால், நாங்கள்தான் வெல்வோம். இந்த முறை இந்திய அணியைத் தோற்கடிப்போம்.
உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கபதற்காக வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது. உலகக் கோப்பைப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அழுத்தம் என்ன என்பது தெரியும், போட்டியின் தீவிரம் என்னஎன்பதும் புரியும். எங்களின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி , முன்னோக்கிச் செல்ல முயல்வோம்.
போட்டிக்கு முன்பாக நாங்கள் குழுவாக இருப்பதால் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகமாகஇருக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு வீரரிடமும் இருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எதிர்காலத்தில் இந்திய அணியை வீழ்த்தவே தயாராகி வருகிறோம். முழுமையாக தயாராகிறோம் என்று நம்புகிறோம். இந்தியாவுக்கு எதிரான அன்றையஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்.
ஹேடன், பிலாண்டர் இருவரும் அதிக அனுபவம் கொண்டவர்கள். இருவரிடம் இருந்து அதிகமான விஷயங்களை வேகமாகக் கற்று வருகிறோம். எங்கள் வீரர்கள் பயிற்சியாளர்களுடன் விரைவாகக் கலந்துவி்ட்டார்கள். பந்துவீச்சாளர்களுக்கு தீவிரமான பயிற்சிகளை பிலாண்டர் வழங்கி வருகிறார். கடந்த காலங்களில் பந்துவீச்சாளர்களால்தான் பல வெற்றிகள் கிடைத்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபில் இந்தியாவுக்கு எதிராக ஹசன்அலிதான் சிறப்பாகப் பந்துவீசினார்.
இவ்வாறு பாபர் ஆஸம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT