Published : 13 Oct 2021 03:27 PM
Last Updated : 13 Oct 2021 03:27 PM
முன்னாள் வீரர் கர்ட்னி ஆம்புரோஸ் என்னைப் பற்றிப் பேசினால் அவரின் மரியாதை கெட்டுவிடும். அவருக்கும் எனக்கும் இருக்கும் பேச்சு முடிந்துவிட்டது என்று மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சமீபத்தில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்னி ஆம்புரோஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆம்புரோஸ் பர்டபாஸில் உள்ள தனியார் வானொலிக்கு சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், “என்னைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணிக்கு இயல்பான தேர்வு கெயில் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்நாட்டுத் தொடரில் கெயில் என்ன விளையாடினார்?
பெயரளவுக்கு விளையாடி ரன்கள் சேர்த்தார். இதற்கு முன் நான் என்ன சொல்லியிருந்தேன், உள்நாட்டுத் தொடரில் கெயில் சரியாக விளையாடாவிட்டால் அவரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று தெரிவித்தேன். இப்போது அணியில் கெயில் இடம் பெற்றுள்ளார். என்னைப் பொறுத்தவரை கெயில் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் அல்ல.
கெயில் ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கடந்த 18 மாதங்களாக கெயில் சரியாகவே விளையாடவில்லை” எனத் தெரிவித்தார். இதே கருத்தை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு வீரரான பெஞ்சமினும் தெரிவித்தார்.
தற்போது ஆம்புரோஸின் கருத்துக்கு கிறிஸ் கெயில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செயின்ட் கிட்ஸ் நகரில் உள்ள வானொலிக்கு கிறிஸ் கெயில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ஆம்புரோஸுக்குத் தனிப்பட்ட முறையில் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும், எனக்கும் இடையிலான பேச்சு முடிந்துவிட்டது. இதற்கு மேல் உங்களுக்கு மரியாதையில்லை. என்னைப் பற்றிப் பேசாதீர்கள், யுனிவர்ஸ் பாஸுக்கு இனிமேல் ஆம்புரோஸ் மீது மரியாதை இல்லை.
நான் ஆம்புரோஸ் பற்றிப் பேசுகிறேன். அவர் மீது அதிகமான மரியாதை வைத்திருந்தேன். ஆனால், இப்போது என் ஆழ்மனதிலிருந்து பேசுகிறேன். ஆம்புரோஸ் ஓய்வு பெற்றதிலிருந்து எனக்கு எதிராக நடக்கிறார். என்னைப் பற்றி ஊடகங்களிடம் எதிர்மறையான கருத்துகளைக் கூறி தன் மீதான கவனத்தை அதிகரிக்கிறார் ஆம்புரோஸ். அவருக்குத் தேவைப்பட்டால் நானும் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்க்க முடியும்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிர்மறையான கருத்துகளை உலகக் கோப்பை தொடங்கும் முன் பேசுவதை ஆம்புரோஸ் நிறுத்த வேண்டும். இந்த அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டது. எங்களுக்கு முன்னாள் வீரர்களின் ஆதரவு தேவை. இதுபோன்ற எதிர்மறையான வார்த்தைகள் தேவையில்லை.
இது நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கிறது. முன்னாள் வீரர்கள் தங்கள் நாட்டு வீரர்களை ஆதரிக்கிறார்கள். ஏன் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் ஆம்புரோஸ் தனது சொந்த அணியைக் கூட ஆதரிக்க மறுக்கிறார்.
இதற்கு முன் இரு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். 3-வது கோப்பைக்காக நகர்கிறோம். என்ன நடக்கிறது என்பதை அணி வீரர்கள் பார்க்கிறார்கள். இது நிச்சயம் அணியில் பிரதிபலிக்கும். முன்னாள் வீரர்கள் தொடர்ந்து எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருந்தால், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் அவமரியாதையாகப் பேச வேண்டியதிருக்கும், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் ஆம்புரோஸை வசைபாட வேண்டியதிருக்கும். ஆதலால், ஆம்புரோஸ் மே.இ.தீவுகள் அணியை உற்சாகப்படுத்துங்கள். ஆதரவு தாருங்கள். இதை மட்டும் செய்யுங்கள்''.
இவ்வாறு கிறிஸ் கெயில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment