Published : 12 Oct 2021 12:39 PM
Last Updated : 12 Oct 2021 12:39 PM

உண்மையான ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி; எங்கள் மீது குப்பைகளைக் கொட்டாதீர்கள்; நாங்களும் மனிதர்கள்தான்: மேக்ஸ்வெல் வேண்டுகோள்

ஆர்சிபி வீரர் கிளென் மேக்ஸ்வெல் | படம் உதவி: ட்விட்டர்.

ஷார்ஜா

உண்மையான ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி. எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்ததற்காக எங்கள் மீது குப்பைகளைக் கொட்டாதீர்கள். நாங்களும் மனிதர்கள்தான் என்று ஆர்சிபி வீரர் கிளென் மேக்ஸ்வெல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த சீசனுக்கு ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், சீசன் தொடங்கியதிலிருந்து சிறப்பாக ஆடினார். இதுவரை 15 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் 513 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 அரை சதங்கள் அடங்கும்.

ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் 5-வது இடத்தில் மேக்ஸ்வெல் உள்ளார். கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் எந்த அளவு மோசமாக விளையாடினாரோ அதற்கு மாறாக, ஆர்சிபி அணிக்கு அதிகமான பங்களிப்பை மேக்ஸ்வெல் செய்தார். ஆர்சிபி அணியின் நடுவரிசையைப் பெரும்பாலான போட்டிகளில் தூக்கி நிறுத்தியவர் மேக்ஸ்வெல். பல போட்டிகளில் வெற்றியையும், பல போட்டிகளில் நல்ல ஸ்கோர் ஏற்படவும் மேக்ஸ்வெல் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆர்சிபி அணி தோல்வி அடைந்தபின் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

''ஆர்சிபி அணிக்கு மிகச்சிறந்த சீசனாக அமைந்தது. துரதிர்ஷ்டமாக எங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு முன்பாகவே விழுந்துவிட்டோம்.

எங்களிடம் இருந்து அற்புதமான சீசனை எடுத்துச் செல்லாது. சமூக வலைதளம் மூலம் எங்கள் மீது குப்பைகளை வீசுவது உண்மையில் வேதனையாக இருக்கிறது.

நாங்களும் மனிதர்கள்தான், ஒவ்வொரு நாளும் எங்களின் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறோம். அவதூறு பரப்புவதற்கு பதிலாக, நாகரிகமான மனிதர்களாக இருக்க முயலுங்கள்.

அன்பையும், ஊக்கத்தையும் வீரர்களுக்கு வழங்கிய உண்மையான ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி. துரதிர்ஷ்டமாக சமூக வலைதளத்தை அச்சுறுத்தும் இடமாக மாற்றும் சில பயங்கரமான மனிதர்களும் இருக்கிறார்கள். இது ஏற்க முடியாது. அவர்களைப் போன்று இருக்காதீர்கள்.

என்னுடைய அணியின் சக வீரர்கள், நண்பர்களை சமூக வலைதளம் மூலமாக எதிர்மறையான, முட்டாள்தனமான கருத்துகளைக் கூறி அவதூறு செய்தால், ஒவ்வொருவர் மூலமும் நீங்கள் பிளாக் செய்யப்படுவீர்கள். பயங்கரமான மனிதராக இருப்பதில் என்ன பயன். உங்களுக்கு மன்னிப்பு கிடையாது''.

இவ்வாறு மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x