Published : 11 Oct 2021 07:20 AM
Last Updated : 11 Oct 2021 07:20 AM
கிரேட் ஃபினிஷர் கேப்டன் தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
9-வது ஃபைனல்
இதன் மூலம் கடந்த 12 சீசன்களில் 9-வது முறையாக சிஎஸ்கே அணியை தல தோனி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 & 2021 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனி தனது 10-வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்(2017-ல்புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்). இதுவரை ஐபிஎல் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் 6 முறை சேஸிங் எடுத்து 6 முறையும் தோனி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.
ப்ளே ஆஃப் சுற்றில் 2-வது முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது சிஎஸ்கேஅணி. இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு விசாகப்பட்டிணத்தில் நடந்த ஆட்டத்தில் குவாலிபயர் -2 ஆட்டத்தில் டெல்லியை வென்றது சிஎஸ்கே. இந்த முறை துபாயில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றுள்ளது.
இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோத வேண்டும்.
ஆட்டநாயகன்
50 பந்துகளில் 70 ரன்கள்(2சிக்ஸர்கள் 5பவுண்டரிகள்) அடித்து ஆட்டமிழந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் 3 வீரர்கள்தான் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, தோனி ஆகிய 3 வீரர்கள்.
ராபின் உத்தப்பா, கெய்க்வாட் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு110 ரன்கள் சேர்த்து அருமையான தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், அடுத்தடுத்து நடுவரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்தவில்லை. ஆனால், கிரேட் ஃபினிஷர் என்று அழைக்கப்படும் தோனி களமிறங்கி தனக்கே உரிய பாணியில் ஆட்டத்தை முடித்துவைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பலவிதமான விமர்சனங்கள், தல போய்டுங்க, போதும் தல, கவுரமாக ரிட்டயர் ஆகிடுங்க என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட தோனியின் பேட்டிங் முறையை கிண்டலாக விமர்சித்தனர். ஆனால், அனைத்தும் தனது பேட்டால் தோனி பதில் அளித்தார்.
கடைசி திக் திக் ஓவர்
ஆவேஷ் கான் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ரன் எடுக்காமல் அடுத்த பந்தில் மிட் விக்கெட்டில் சிக்ஸர் தூக்கியபோதே தோனியை விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போகினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. வாரிவள்ளல் டாம் கரண் பந்துவீசினார். களத்தில் மொயின் அலி, தோனி இருந்தனர்
முதல் பந்தை சந்தித்த மொயின் அலி 16 ரன்னில் டீப் ஸ்குயர் லெக்கில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2வது பந்தை தோனி சந்தித்தார். எக்ஸ்ட்ரா கவரில் அருமையான பவுண்டரியை தோனி அடித்தார். 3-வதுபந்தில் தோனியின் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. ஆட்டம் பரபரப்பின் உச்சத்துக்கு சென்றது.
4-வது பந்தில் தோனி பந்தை அடிக்க முயற்சிக்க வைடாக வீசப்பட்டு ஒரு ரன் கிடைத்தது. 4-வது பந்து மீண்டும் வீசப்பட்டபோது, டீக் ஸ்குயர் லெல்கில் தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை தோனி முடித்து வைத்தார்.
தோனி 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி உள்ளிட்ட 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனியின் ஸ்ட்ரேக் ரேட் 300 ஆக இருந்து அவரின் பேட்டிங் குறித்த விமர்சனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது.
நான் ஹெட்மாஸ்டர்
லீக் சுற்றில் குருவை மிஞ்சினார் சிஷ்யன் என்று டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் தோனி தனக்கேஉரிய ஸ்டைலில் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து ரிஷப் பந்த் தோளில் தட்டிக் கொடுத்து, “நீ படித்த ஸ்கூலில் நான் ஹெட்மாஸ்டர்” என்று சிறிய புன்னகையுடன் கடந்து சென்றார்.
வீழ்வேன் என நினைத்தாயோ
தோனி வீழ்ந்துவிடுவார், அடுத்த சீசனில் ஆடுவதற்கு அவருக்கு பேட்டிங் திறமை இல்லை, மென்ட்டர் அல்லது பயிற்சியாளராகவோ வர முடியும் என்று ஆருடம் கணிக்கப்பட்டது. ஆனால், 40 வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்ற ரீதியில் தனது கிரேட்ஃபினிஷிங்கை நிரூபித்துள்ளார், தனது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை 300 வைத்து திகைக்க வைத்துள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு வீழ்வேன் என நினைத்தாயோ என்ற ரீதியில் தோனி பேட்டிங்கால் கேள்வி எழுப்பிவிட்டார்.
உத்தப்பா, கெய்க்வாட் அபாரம்
173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே டூப்பிளசி ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகினார். வழக்கத்துக்கு மாறாக 3-வது வீரராக உத்தப்பா களமிறக்கப்பட்டார். இதற்கு முன் கொல்கத்தா அணியில் இருந்தபோது தொடக்க வீரராகவும், 3-வது வீரராகவும் களமிறங்கிதான் உத்தப்பா தனது அதிரடி பேட்டிங்கால் கலக்கினார்.
அதை மனதில் வைத்து உத்தப்பா களமிறக்கப்பட்டார். தனது பணியை சிறப்பாக செய்த உத்தப்பா, டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட்இழப்புக்கு 59 ரன்கள் என்று 10 ரன்ரேட்டில் பறந்தது.
சிக்ஸர் பவுண்டரி என விளாசிய உத்தப்பா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற உத்தப்பா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். தனக்கு கொடுக்கப்பட்ட தொகை, தன்னை ஏலம் எடுத்தது சரியான முடிவு என்பதை உத்தப்பா இந்த ஒரு ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார்.
இவருக்கு துணையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் இருவரும் பிரிந்தனர். உத்தப்பா 44 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் டாம் கரண் பந்துவீச்சில் வெளியேறினார்.
விக்கெட் சரிவு
அடுத்துவந்த தாக்கூர் பெரியஷாட் அடிக்கும் முயற்சியில் டக்்அவுட் ஆகினார், ராயுடு ஒரு ரன்னில்ரன்அவுட் ஆகினார். கெய்க்வாட் 70 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மொயின் அலி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் 2 ஓவர்களில் 19 ரன்களை வாரி வழங்கினார். அக்ஸர் படேல் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்தார்.
தவண், ஸ்ரேயாஸ் ஏமாற்றம்
முன்னதாக டெல்லி கேப்டல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. பிரித்வி ஷா, தவண் நல்ல தொடக்கம் அளித்தனர். தவண் நிதானமாக ஆட, பிரித்விஷா வெளுத்து வாங்கினார். தவண் 7 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஒரு ரன்னிலும் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது டெல்லி .
அதிரடியாக பேட் செய்த பிரித்விஷா 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய அக்ஸர் படேல் 10 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் அடிக்கும் முயற்சியில் ஜடேஜா பந்துவீச்சில் பிரித்விஷா 60 ரன்களில்(34 பந்துகள் 3 சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்தார். 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைஇழந்த டெல்லி, அடுத்த 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
ரிஷப் பந்த்,ஹெட்மெயர்
5-வது விக்கெட்டுக்கு ஹெட்மெயர், கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இருவரும் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிைலக்குக் கொண்டு சென்றனர். ஹெட்மெயர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிஎஸ்கே அணித் தரப்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...