Published : 10 Oct 2021 02:46 PM
Last Updated : 10 Oct 2021 02:46 PM
ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் டிஆர்எஸ் ரிவியூஸ் முறை முதல்முறையாகச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இம்மாதம் 17ம் தேதிதொடங்கி நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. இந்தப் போட்டித் தொடரில், டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்த ஐசிசி முறைப்படி அனுமதி அளித்துவிட்டதையடுத்து, இந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது.
இது குறித்து கிரிக்இன்போ வெளியிட்ட செய்தியில், “ ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில்நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக டிஆர்எஸ் முறை அறிமுகமாகிறது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு இன்னிங்ஸில் இரு ரிவியூஸ் வழங்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் ஐசிசி வெளியிட்ட அறிக்கையின்படி, கிரிக்கெட்டின் அனைத்துப் போட்டிகளிலும் கூடுதலாக ஒருடிஆர்எஸ் ரிவியூ சேர்க்க அனுமதிக்கலாம். அனுபவம் குறைந்த நடுவர்கள், அதிகமான வேலைப் பளு, கரோனா வைரஸ் பரவல் காரணமாக தவறுகள் நேரலாம் என்பதால், டிஆர்எஸ் ரிவியூ கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.
ஆதலால்,இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு இன்னிங்ஸுக்கு 2 டிஆர்எஸ் ரிவியூ வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் 3 ரிவியூகளும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்2 ரிவியூகளும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்குமுன் கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. டிஆர்எஸ் முறை முதன்முதலாக கரிபீயனில்நடந்த மகளிர் டி20 போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT