Published : 09 Oct 2021 01:55 PM
Last Updated : 09 Oct 2021 01:55 PM
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தொகை நிரப்பப்படாத காசோலை(பிளாங்க்-செக்) கிடைக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதானச் சுற்று வரும் 24்ம்தேதி தொடங்குகிறது. துபாயில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இ்ந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல்ரீதியான உறவு மிகவும் மோசமடைந்ததால், கடந்த 13 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. இரு அணிகளும் பொது இடத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால், இரு நாட்டு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் அதை இரு நாட்டு ரசிகர்களும் வரவேற்கின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு கடைசியாக ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்றது அதன்பின் 14 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை. அதிலும் 2008 மும்பை தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில் சூப்பர் 12 பிரிவில் குரூப்- 2 பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணியோடு சேர்த்து பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், பி பிரிவில் முதலிடம் பெறும் அணியும், ஏ பிரிவில் 2-ம் இடம் பெறும் அணியும் இடம் பெறும்.
துபாயில் வரும் அக்டோபர் 24-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு உலகக் கோப்பையின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த நெருக்கடியும், அழுத்தமும் சூழ்ந்து தோல்விக் குழிக்குள் தள்ளிவிடும்.கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இரு அணிகளும் எந்தவிதமான ஆட்டத்திலும் நேருக்கு நேர் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் அதே அளவு நெருக்கடி, அழுத்தம் பாகிஸ்தானுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், கடந்த கால வரலாற்றைத் தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணியும் தோல்வி அடையாமல் இருக்க கடுமையாகப்போராடும்
ஆனால், இந்த முறை பாபர்ஆஸம் தலைமையிலான அணி வெல்வதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அது குறி்த்த ரகசியத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்டார்.
கராச்சியில் நேற்றுமுன்தினம் நடந்த பாகிஸ்தான் வாரிய செனட் நிலைக் குழுக் கூட்டத்தில் ரமீஸ்ராஜா பேசுகையில், “ இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை எப்படியாவது வெல்ல வேண்டும். அதற்கான பாபர் ஆஸம் தலைமையிலான அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஒருவேளை உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்திவிட்டால், பாகி்ஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தொகை நிரப்பப்படாத காசோலை(பிளாங்க் செக்) மிகப்பெரிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT