Published : 09 Oct 2021 11:41 AM
Last Updated : 09 Oct 2021 11:41 AM
ஐபிஎல் டி20 2-வது சுற்றில் ஒட்டுமொத்தமாகவே தோல்வி அடைந்து தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டோம் என்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் மும்பை இந்தியன்ஸ் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 42 ரன்களில் தோல்வி அடைந்தது.
250 ரன்கள்வரை அடித்து, 70 ரன்களுக்குள் சன்ரைசர்ஸ் அணியை சுருட்டினால் ப்ளே ஆஃப் வாய்ப்புமும்பை அணிக்கு இருக்கிறது எனக் கூறப்பட்டது. அதன்படி தங்களுக்கான இலக்கை ஏறக்குறைய தொட்டுவிட்ட மும்பை 235 ரன்கள் சேர்த்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பது மிகப்ெபரிய இலக்கு, அந்த இலக்கில் பந்துவீச்சாளர்கள் கோட்டைவிட்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு சீசனிலிருந்து மும்பை அணி முதலிடம் அல்லது 5-வது இடம் ஆகிய இரு இடங்களையே பிடித்து வருகிறது. இந்த சீசனிலும் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 3 சீசன்களில் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற 5 முறை சாம்பியன் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுவது இதுதான் முதல்முறை.
இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
மும்பை அணிக்காக சிறந்த ரன்களை அடித்துக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் இந்த சீசனில் செயல்பட்டவிதம், செய்தது பெருமையாகவே இருக்கிறது. டெல்லியில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றோம். ஆனால், கரோனா வைரஸால் சிறிய இடைவெளிவிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் வந்ததில் இருந்து நாங்கள் ஒட்டுமொத்த தோல்வி அடைந்துவிட்டோம்.
மும்பை அணி போன்ற சிறந்த அணிக்காக விளையாடும்போது, நாம் சிறப்பாக விளையாடுவோம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இதை நான் அழுத்தம் என்று கூறமாட்டேன், அதைவிட எதுவேண்டுமானாலும் இருக்கலாம், அது எதிர்பார்ப்பாககூட இருக்கலாம். கடந்த 5முதல் 6 ஆண்டுகளாக இந்த அணியினர் குழுவாக பிரியாமல் இருக்கிறோம்.
எங்களுக்கு இந்த சீசன் மட்டுமல்லாது பல சீசன்களிலும் வெற்றி, தோல்வி நிறைந்துதான் இருந்தது. ஆனால், இன்றைய வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பங்களிப்பையும் கொடுத்தோம், ரசிகர்களை மகிழ்வித்தோம். நாங்கள் ப்ளே ஆஃப் செல்லவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT