Last Updated : 09 Oct, 2021 07:22 AM

1  

Published : 09 Oct 2021 07:22 AM
Last Updated : 09 Oct 2021 07:22 AM

'பை, பை' மும்பை: சன்ரைசர்ஸை வீழ்த்தியும் ரோஹித் படைக்கு ப்ளே வாய்ப்பு இல்லை: இஷான், சூர்யகுமார் விளாசல் வீண்

வெற்றிக்குப்பின் சன்ரைசர்ஸ் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா | படம் உதவி ட்விட்டர்

அபு தாபி

அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் மும்பை இந்தியன்ஸ் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 42 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ஆறுதல் பட்டுக் கொண்டாலும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் நடப்பு சாம்பியன் வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி 235 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது.

250 ரன்கள்வரை அடித்து, 70 ரன்களுக்குள் சன்ரைசர்ஸ் அணியை சுருட்டினால் ப்ளே ஆஃப் வாய்ப்புமும்பை அணிக்கு இருக்கிறது எனக் கூறப்பட்டது. அதன்படி தங்களுக்கான இலக்கை ஏறக்குறைய தொட்டுவிட்ட மும்பை 235 ரன்கள் சேர்த்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியை 65 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பது மிகப்ெபரிய இலக்கு, அந்த இலக்கில் பந்துவீச்சாளர்கள் கோட்டைவிட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு சீசனிலிருந்து மும்பை அணி முதலிடம் அல்லது 5-வது இடம் ஆகிய இரு இடங்களையே பிடித்து வருகிறது. இந்த சீசனிலும் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 3 சீசன்களில் தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற 5 முறை சாம்பியன் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுவது இதுதான் முதல்முறை.

நாளை நடக்கும் முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிமோதுகிறது. 11ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணியை எதி்ர்த்து கொல்கத்தா அணி மோதுகிறது.

ஐபிஎல் 2-வது சுற்று தொடங்கியதிலிருந்து மும்பை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் ஃபார்மி்ல்லாமல் தவித்து சொதப்பியது தொடர் தோல்விகளுக்கு காரணம். குறிப்பாக ஹர்திக் பாண்டியா உடற்தகுதி இல்லை எனத் தெரிந்தும் தொடர்ந்து வாய்ப்பு அளித்தது, வீரர்களை மாற்றாமல் தொடர்ந்து களமிறக்கியது, ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததும் அதற்கான காரணத்தைக் கண்டு அடுத்தப் போட்டியில் தோல்வியிலிருந்து மீள்வது போன்றவற்றை இந்த சீசனில் செய்ய தவறியதே மும்பை அணியின் தோல்விக்கு காரணம்.

மும்பை இந்தியன்ஸ் என்றாலே அதீதமான தன்னம்பிக்கை, மேம்பட்ட அணி, எது நடந்தாலும் கடந்துவிடுவோம், உலகத் தரம் வாய்ந்த வீரர்களைப் பெற்றுள்ளோம், இரு முறை சாம்பியன்கள் என்ற மிதப்புடனே வீரர்கள் ஒவ்வொரு போட்டியையும் அணுகியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.

ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர்தான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் ஒரு பந்துகூட வீசாத, பேட்டிங்கில் ஃபார்மில்லாத அவரை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு எந்த தைரியத்தில் தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உடற்தகுதி இல்லாத ஒருவரை கடந்த காலப் போட்டியை வைத்து தேர்வு செய்ததற்கு பதிலாக சிறப்பாக விளையாடிவரும், திறமையான தற்போதுள்ள தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர் போன்றவர்களை ஏன் தேர்வு செய்யாமல் பெஞ்சில் வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

அதிரடியாக ஆடிய மும்பை அணி வீரர் இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள்(4சிக்ஸர், 11பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனின் 2-வது பகுதி முழுவதும் சொதப்பிய இஷான் கிஷன் இரு போட்டிகளில் அணியிலிருந்தே நீக்கப்பட்டு அதன்பின் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


கடந்த போட்டியில் அரைசதமும், இந்த போட்டியில் அதிரடி அரைசதமும் இஷான் அடித்துள்ளார். 16 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன் இந்த சீசனில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர் என்பதை பதிவு செய்தார். இருந்தாலும், டி20 உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இஷான் கிஷனின் பேட்டிங் ஃபார்மும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மும்பை அணியின் ஸ்கோர் உயர்வுக்கு இரு வீரர்கள் பிரதான காரணம் ஒருவர் இஷான் கிஷன், மற்றொருவர் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில்82 ரன்கள் சேர்த்து(3 சிக்ஸர், 13 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்த இரு வீரர்களுமே இந்திய டி20 உலகக் கோப்பைக்கான அணி்யில் உள்ளனர். ஐபிஎல் 2-வது சுற்றில் இரு வீரர்களுமே ஃபார்மில் இல்லை, கடைசிப் போட்டியில் இருவரும் அடித்து ஃபார்மை நிரூபித்துவிட்டார்கள் என்ற வாதத்தை எவ்வாறு ஏற்பது எனத் தெரியவில்லை.

இந்த இரு வீரர்களைத் தவிர மும்பை அணியில் வேறு எந்த வீரர்களும் நேற்று பேட்டிங் ஒழுங்காகச் செய்யவில்லை. சூர்யகுமார், இஷான் இருவரும் சேர்ந்து 166 ரன்கள் சேர்த்துக் கொடுத்தனர்.

இஷான் கிஷன் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தில் மும்பை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதைப் பார்த்த ரசிகர்கள், சன்ரைசர்ஸ் அணி வேண்டுமென்றே மும்பை அணிக்கு விட்டுக் கொடுக்கிறார்கள் என்றும், மேட்ச் பிக்ஸிங் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர். போட்டி செல்லும் முறையும், மும்பை அணி 200 ரன்களுக்கு ேமல் அடிக்க வேண்டும் என்பதால் அதற்கான தளத்தை சன்ரைசர்ஸ் அணி அமைத்துத் தருவதாக ரசிகர்கள் எண்ணினர்.

சன்ரைசர்ஸ் வீரர்களின் பந்துவீச்சை இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் நொறுக்கி எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மாவைத் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் 12 ரன்களுக்க மேல்தான் வாரி வழங்கினர்.

பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் சேர்த்தது. 7.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 12.4 ஓவர்களில் 150 ரன்களையும், 16.4 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது. மும்பை அணியின் ராக்கெட் வேக ரன்ரேட் நிச்சயம் ரசிகர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியில் ரோஹி்த் சர்மா(18), ஹர்திக் பாண்டியா(10) பொலார்ட்(13), குர்னல் பாண்டியா(9) ஆகிய நம்பிக்கையளிக்கும் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர்.
சன்ரைசர்ஸ் தரப்பில் ஹோல்டர் 4 வி்க்கெட்டுகளையும், ரஷித் கான், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. 65 ரன்களுக்குள்் சுருட்ட முயற்சித்த மும்பை பந்துவீச்சாளர்கள் எண்ணத்தை ஜேஸன் ராய், அபிஷேக் சர்மா உடைத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர். அப்போதே மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவு கலைக்கப்பட்டது.

ஜேஸன் ராய் 34 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 33 ரன்களில் நீஷம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சன்ரைசர்ஸ் அணியல் மற்றபடி வழக்கம் போல் வேறு எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து ஆடவில்லை.

மணிஷ் பாண்டே கேப்டன் பொறுப்பேற்று பொறுப்புடன் பேட் செய்து 69 ரன்கள்(2சிக்ஸர்,7பவுண்டரி)ஆட்டமிழந்தார். பிரியம் கார்க் 29 ரன்கள் சேர்த்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர்.

மும்பை அணியில் பும்ரா, கூல்டர் நீல், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x