Published : 16 Mar 2016 07:25 PM
Last Updated : 16 Mar 2016 07:25 PM

உ.கோ.டி20: அப்ரிடி ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 குரூப் 2 ஆட்டத்தில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

நல்ல பேட்டிங் பிட்சில் டாஸ் வென்ற ஷாகித் அப்ரிடி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களையே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அப்ரிடி 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசியதோடு, 2 முக்கியமான விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் வீழ்த்தி ஆல்ரவுண்ட் திறமையை நிரூபித்தார்.

பாகிஸ்தான் அணியில் ஏகப்பட்ட கேள்விகளுடன் தேர்வு செய்யப்பட்ட அகமட் ஷெசாத் 39 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதில் 20 சிங்கிள்கள் அடங்கும், எனவே அவர் அடிக்க வேண்டிய பந்துகளை தேர்ந்தெடுத்து அடித்துள்ளார். குறிப்பாக 8 பவுண்டரிகள் இவரது இன்னிங்சில் அடங்கும்.

பிறகு மொகமது ஹபீஸ் 42 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து, இவரும் ஷெசாத்தும் இணைந்து 95 ரன்களை 68 பந்துகளில் சேர்த்து பாகிஸ்தானை நிலைநிறுத்தியதோடு, பின்னால் அப்ரிடி தனது அதிரடியைக் காட்ட மேடை அமைத்துக் கொடுத்தனர். ஷெசாத் அவுட் ஆகும் போது 13.5 ஓவர்களில் பாகிஸ்தான் 121/2 என்று வலுவாக இருந்தது.

அப்ரிடி களமிறங்க 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 49 ரன்களை விளாசினார். இவரிடம் ஷாகிப் அல் ஹசன், மஷ்ரபே மோர்டசா அல் அமின் ஹுசைன் ஆகியோர் வாங்கிக் கட்டிக் கொண்டனர். தொடக்கத்தில் ஷர்ஜீல் கான் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அரபாத் சன்னியிடம் பவுல்டு ஆனார். கடைசியில் ஷோயப் மாலிக் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதில் தஸ்கின் அகமதுவின் யார்க்கரை நேராக அடித்த பவுண்டரி ‘கிளாஸ்’ ரகத்தைச் சேர்ந்தது.

பிட்ச் வங்கதேச ரக பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. அனைவருமே ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். மாறாக பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பிட்சை நன்றாக பயன்படுத்தி விளாசினர். மொகமது ஹபீஸுக்கு சவுமியா சர்க்கார் பிடித்த கேட்ச் உலகத்தரம் வாய்ந்தது. அராபத் சன்னியின் பந்தை ஹபீஸ் ஸ்லாக் ஸ்வீப் செய்ய பந்து நேராக மிட்விக்கெட்டுக்கு சிக்சராக சென்று கொண்டிருந்தது. சவுமியா இடதுபுறம் ஓடி இருகைகளையும் தூக்கி கேட்ச் பிடித்தார், ஆனால் சமநிலை குலைந்து எல்லைக்கோட்டைக் கடக்கவிருந்த நிலையில் பந்தை எல்லைக்கோட்டுக்குள் உயரமாக விட்டெறிந்து பிறகு சுதாரித்து உள்ளே வந்து பிடித்தார்.

பாகிஸ்தானின் 201 ரன்கள் இலக்கைத் துரத்த களமிறங்கிய வங்கதேச அணி எடுத்த எடுப்பிலேயே மொகமது ஆமிரின் உஷ்ணத்துக்கு 3-வது பந்திலேயே சவுமியா சர்க்காரை இழந்தது. 145 கிமீ வேக யார்க்கர் லெந்த் பந்தைக் கண்டு அதிர்ந்த சவுமியா கால்கள் நகராமல் நிலைக்க பந்து ஸ்டம்பைப் பெயர்த்தது.

அதன் பிறகு தமிம் இக்பாலுடன் சபீர் ரஹ்மான் இணைந்தார். சபீர் ரஹ்மான் வங்கதேச அணியின் வேறொரு ‘ரக’ பேட்ஸ்மென் என்பது புரிந்தது. அவர் அடித்த 5 பவுண்டரிகளுமே அபாரமானது, அதிகமாக அலட்டிக்கொள்ளாத அவரது ஆட்டம் பார்க்க அருமையாக அமைந்தது. ஆமிர், மொகமது இர்பான் ஆகியோரது வேகம் இவரை அசைக்கவில்லை, அவர்கள் பந்தை ஆடுவதற்கு இவருக்கு மட்டும் அதிக நேரம் இருந்தது. தமிம் இக்பால் 2 சிக்சர்களை அடித்தார். அதுவும் ஷோயப் மாலிக்கை அடித்த சிக்ஸ் அபாரமானது, இருவரும் இணைந்து ஸ்கோரை 5.5 ஓவர்களில் 44 என்று கொண்டு சென்றனர்.

ஆனால் அப்போதுதான் ஷாகித் அப்ரிடி அருமையான பந்துவீச்சில் சபீர் ரஹ்மானை 25 ரன்களில் பவுல்டு செய்தார். சபீர் 25 ரன்களை 19 பந்துகளில் எடுத்து அச்சுறுத்தினார். பிறகு தமிம் இக்பாலும் (24) ஷாகித் அப்ரிடியிடம் வீழ்ந்தார். மஹ்முதுல்லா 4 ரன்களில் இமாத் வாசிமிடமும், முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்களில் மொகமது ஆமிரிடமும் சிக்க 16.4 ஓவர்களில் 110/5 என்று ஆனது வங்கதேசம், ஷாகிப் அல் ஹசன் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தது ஓரளவுக்கு வங்கதேச நிகர ரன் விகிதத்தை உயர்த்த பயன்பட்டதைத் தவிர வேறு நோக்கங்களை நிறைவேற்றவில்லை.

ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x