Published : 07 Oct 2021 04:06 PM
Last Updated : 07 Oct 2021 04:06 PM
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கின் வளர்ச்சியைக் கண்காணித்து அவரின் திறமையை மேம்படுத்துவது அவசியம் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
சன் ரைசர்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றவர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேரந்த உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இர்பான் பதானின் வளர்ப்பில், பட்டை தீட்டுதலில் உருவானவர் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் நடராஜன் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டார்.
வலைப்பயிற்சியின்போது, உம்ரான் மாலிக் பந்துவீச்சை எதிர்கொள்ள டேவிட் வார்னர் பலமுறை திணறியுள்ளார். இதைப் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் கவனித்துதான் அணிக்குள் உம்ரான் மாலிக்கைக் கொண்டுவந்தனர்.
முதல் ஆட்டத்திலேயே உம்ரான் மாலிக் 151 கி.மீ. வேகத்தில் பந்துவீசி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே 3-வது அதிகபட்ச வேகப்பந்துவீச்சாக உம்ரான் மாலிக் பந்துவீச்சு அமைந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் 151 கி.மீ. வேகத்தில் வீசிய உம்ரான் மாலிக் லைன் லென்த் தவறாமல் வீசி ஆர்சிபி பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். பலமுறை பேட்ஸ்மேன்களை பீட்டன் செய்து பந்து சென்றது. 4 ஓவர்கள் வீசிய உம்ரான் 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இளம் வீரர்களை அடையாளம் காட்டுவதாக ஐபிஎல் தொடர் இருக்கிறது.
150 கி.மீ. வேகத்தில் இளம் வீரர் உம்ரான் பந்துவீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கிருந்து உம்ரான் மாலிக் வளர்ச்சியைக் கண்காணித்து அவரை வளர்க்க வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் வலிமை அடைந்து அதிகரித்து வருவது இந்தியக் கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறி. எப்போதெல்லாம் இதுபோன்ற திறமையானவர்களைப் பார்க்கும்போதும், அவர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் அளித்த பேட்டியில், “ உம்ரான் உண்மையில் சிறப்பானவர். வலைப்பயிற்சியில் அவரின் பந்துவீச்சை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு ஸ்பெஷல் வாய்ப்பு கொடுத்தோம், அவர் இங்கு வந்து இவ்வாறு பந்துவீசுவசு வியப்பானது இல்லை. எங்கள் அணியில் உம்ரான் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலம், மதிப்பாகும்” எனத் தெரிவித்தார்.
ஜம்முவின் குஜ்ஜார் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் உம்ரான் மாலிக். உம்ரான் மாலிக்கின் தந்தை சிறிய அளவில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். டி20 போட்டியில் ஜம்மு அணிக்காக உம்ரான் மாலிக் அறிமுகமாகி, ரயில்வேஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT