Last Updated : 06 Oct, 2021 03:51 PM

 

Published : 06 Oct 2021 03:51 PM
Last Updated : 06 Oct 2021 03:51 PM

எந்த மாற்றமும் இல்லை; எப்போதும் என்னுடன் அவர்தான் ஓப்பனிங்: வார்னருக்கு ஆரோன் பின்ச் ஆதரவு

ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் | கோப்புப்படம்

மெல்போர்ன்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் என்னுடன் சேர்ந்து டேவிட் வார்னர்தான் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஆஸ்திரேலிய அணிக்காக எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை. காயம் காரணமாகப் பல போட்டிகளில் வார்னரும் இடம் பெறவில்லை. ஐபிஎல் டி20 தொடரின் 2-வது சுற்று தொடங்கியபின் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் வார்னர் சிறப்பாக பேட் செய்யவில்லை. இதனால், வார்னரை பெஞ்ச்சில் அமரவைத்தது சன்ரைசர்ஸ் அணி.

இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக வார்னர் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பதில் அளித்துள்ளார்.

கிரிக்இன்போ தளத்துக்கு ஆரோன் பின்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நிச்சயமாக உலகக் கோப்பையில் என்னுடன் வார்னர் களமிறங்குவார். என்னுடன்தான் ஆட்டத்தைத் தொடங்குவார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியதில் மிகச்சிறந்த வீரர்களில் வார்னர் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது.

வார்னர் உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகி வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹைதராபாத் அணிக்காக விளையாடுவதிலும் வார்னர் விருப்பமாக இருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை. வார்னர் வேறு இடத்தில் பயிற்சி எடுத்து வருகிறார் என்பது தெரியும். நல்லபடியாகப் பயிற்சி எடுக்கட்டும்.

கடந்த 2 வாரங்களாக என் காயத்திலிருந்து விரைவாகக் குணமடைந்து வருகிறேன். உலகக் கோப்பைக்கு முன்பாக குணமடைந்துவிடுவேன். என்னுடைய காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கூட என் உடல்நிலை முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். உடற்தகுதி அடைந்துவிட்டால், அணியுடன் இணைந்துகொள்வேன்''.

இவ்வாறு ஆரோன் பின்ச் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x