Published : 06 Oct 2021 03:25 PM
Last Updated : 06 Oct 2021 03:25 PM
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்கி விளையாட வைத்திருக்கலாம். தோனியைப் பொறுத்தவரை பந்து பேட்டில் பட்டாலே ஆறுதல் அடைந்துவிடுவார் என்று மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்தப் போட்டியில் 27 பந்துகளைச் சந்தித்த தோனி 18 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட தோனி அடிக்கவில்லை. சிறந்த ஃபினிஷர் என்று அறியப்பட்ட தோனியின் பேட்டிங்கைப் பார்த்தபோது அவர்களின் ரசிகர்களே வெறுப்படைந்து, சேனலை மாற்றும் அளவுக்கு இருந்தது.
தோனி பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லையா அல்லது பேட்டிங் மறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. அவரின் பேட்டிங் முறை, ஸ்டைல் அனைத்தும் பழைய தோனி இல்லை என்பதையே கூறியது.
பந்துகளை வீணடிக்காமல் தோனி விரைவாக ஆட்டமிழந்து சென்றிருந்தால்கூட, ஜடேஜா களமிறங்கி சில ஷாட்களை அடித்திருப்பார். ஸ்கோராவது உயர்ந்திருக்கும். பேட்டிங் மறந்துவிட்டதுபோல் செயல்படும் தோனி, இனிவரும் போட்டிகளில் 8-வது, 9-வது வீரராகக் கூட களமிறங்கலாம், தவறில்லை. நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர்களுக்கு தோனி வாய்ப்புகளை வழங்கி அழகு பார்க்கலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நேற்று டெல்லி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சிலும் ரன் சேர்க்க தோனி திணறினார். சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், அஸ்வினின் 16 பந்துகளைச் சந்தித்த தோனி அதில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். சரி வேகப்பந்துவீச்சை விளாசுவார் என எதிர்பார்த்தபோது, வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, நோர்க்கியா, ஆவேஷ் கான் என 3 பேரின் பந்துவீச்சில் 11 பந்துகளைச் சந்தித்த தோனி 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தப் போட்டியில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 66 ஆகக் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் 136 என இருந்த தோனியின் ஸ்ட்ரைக் ரேட் கடந்த 3 சீசன்களாக 96ஆகக் குறைந்துவிட்டது.
இந்த ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்பாக தோனி களமிறங்க முடிவு செய்தது குறித்து மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கில் ஃபார்முக்கு வரும் முயற்சியாகவே ஜடேஜாவுக்கு முன்பாகக் களமிறங்கியுள்ளார். ஆனாலும், அவரின் பேட்டிங் இன்னும் சிறிது மந்தமாகவே இருக்கிறது. இன்னும் முழுமையான வேகத்துக்கு வரவில்லை. நமக்கு முன்பே தெரிந்த, நல்ல ஃபினிஷர் தோனி இல்லை. இப்போதிருக்கும் தோனி, தனது பேட்டில் பந்து பட்டாலே ஆறுதல் அடைந்து கொள்வார் போலத் தெரிகிறது. அவரால் ஃபினிஷ் செய்ய முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை தோனி களமிறங்கிய இடத்தில் ஜடேஜாவைக் களமிறக்கியிருக்க வேண்டும். ஏனென்றால் ஜடேஜா நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் பேட்டிங் செய்திருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தோனி சிறந்த ஃபினிஷர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சிஎஸ்கே அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சென்றுவிட்டதும் தோனிக்கும் தெரியும். இந்த நேரத்தில் தோனியின் நல்ல ஃபார்ம் சிஎஸ்கே அணிக்குப் பெரிய சொத்து''.
இவ்வாறு லாரா தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT