Published : 06 Oct 2021 02:58 PM
Last Updated : 06 Oct 2021 02:58 PM
பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல் மேற்கத்திய அகங்காரம். இதேபோன்ற செயலை வசதியான, அதிகாரம் மிக்க, சக்திமிக்க இந்தியாவிடம் செய்யமாட்டார்கள் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொண்டு விளையாடத் திட்டமிட்டிருந்தன. ஆனால், நியூஸிலாந்து அணி, ஒருநாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தொடரை ரத்து செய்து கிளம்பியது.
நியூஸிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, பாகிஸ்தானுக்கான பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்து, அதற்கு மன்னிப்பு கோரியது. இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவுக்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மேக்கேல் ஹோல்டிங்கிற்கு, “கிரிக்கெட் ரைட்டர்ஸ் கிளப் பீட்டர்ஸ் கிளப் விருது” நேற்று வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் நிகழ்ச்சியில் மைக்கேல் ஹோல்டிங், இங்கிலாந்து வாரியத்தை காட்டமாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:
''இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை என்னை ஒன்றும் செய்யாது. யாரும் முன்னால் வந்து எதையும் எதிர்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், தாங்கள் தவறு செய்துள்ளோம் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கும், அந்த அறிக்கைக்குப் பின்னாலும் அவர்கள் மறைந்துள்ளார்கள். அவர்கள் செய்த செயலால் 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்'தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
இதற்குள் நான் போக விரும்பவில்லை. ஏனென்றால் 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்' பற்றி நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்த செயல், மேற்கத்திய அகங்காரத்தையே நினைவுபடுத்துகிறது. நான் எவ்வாறு நினைக்கிறேனோ அவ்வாறு நடத்துவேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது விஷயமல்ல. நான் என்ன விரும்புவேனோ அதைத்தான் செய்வேன்.
பாகிஸ்தானிடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தொடரை இங்கிலாந்து நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. வசதி படைத்த, அதிகாரம் கொண்ட, சக்திவாய்ந்த இந்தியாவிடம் இதே முடிவை இங்கிலாந்து கூறுவதற்குத் துணிச்சல் இருக்கிறதா?
தடுப்பூசி பரவலாகக் கிடைக்கும் காலத்துக்கு 6 வாரங்களுக்கு முன்பே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என இங்கிலாந்து அப்போது நினைத்தது. மரியாதை அளித்தது. இப்போது தேவையில்லை. இதேபோன்று இந்தியாவிடம் செய்ய முடியாதே?''
இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT