Last Updated : 05 Oct, 2021 12:44 PM

 

Published : 05 Oct 2021 12:44 PM
Last Updated : 05 Oct 2021 12:44 PM

மோர்கன், சவுதியுடன் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை; விளம்பரத்தை விரும்புபவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்: அஸ்வின் விளக்கம்

டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் | கோப்புப்படம்

துபாய்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன், டிம் சவுதியுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை. விளம்பரத்தை விரும்புபவர்கள்தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும். ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர் கடைப்பிடிப்பதில்லை.

டிம் சவுதி வீசிய 20 ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார். அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார். இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இந்தச் சம்பவத்தில் மோர்கனுக்கு ஆதரவாகவும், அஸ்வினுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வின் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''எனக்கும் மோர்கனுக்கும், சவுதிக்கும் இடையே எந்தவிதமான தனிப்பட்ட மோதலும் இல்லை. தனிப்பட்ட ரீதியில் எதையும் தவறாக எடுக்கவில்லை. சிலர் விளம்பரம் தேவை, தன் மீது கவனம் குவிய வேண்டும் என நினைப்பவர்கள் அவ்வாறு அதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நான் அந்தச் சம்பவத்தைப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை.

ஏனென்றால் இதுபோன்ற மோதல்கள், வாக்குவாதங்கள் பலமுறை களத்தில் இதற்கு முன் நடந்துள்ளன. அப்போது நான் மிகவும் கோபமடைந்திருக்கிறேன். ஏனென்றால், ஒரு பேட்ஸ்மேன் சாதாரணமாக ஆட்டமிழந்து சென்றபோதுகூட சவுதியும்,மோர்கனும் அவருக்கு சென்ட் ஆஃப் செய்தனர்.

இதில் மோசமான சூழல் என்னவென்றால், இந்தச் சம்பவம் நடந்தபோது, ரிஷப் பந்த் மீது பந்து பட்டது எனக்குத் தெரியாது. நான் கவனிக்கவும் இல்லை. அதனால்தான் 2-வது ரன் ஓடி வாருங்கள் என அழைத்தேன். என்னை நோக்கிப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் சரியான திசையிலும் இல்லை, இடத்திலும் இல்லை.

இதைத் தவிர்த்துப் பார்த்தால், கலாச்சார ரீதியாக மக்கள் வேறுபட்டவர்கள், இங்கிலாந்து, இந்தியாவில் கிரிக்கெட்டுக்காக வீரர்கள் வந்த தளம், பயிற்சி எடுத்தது அனைத்தும் வேறுபாடான சூழல். ஆதலால்தான் ஒருவரின் சிந்தனையும் மாறுபட்டதாக இருக்கும்.

ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் பற்றிக் கேட்டால், இங்கு யாரும் தவறு செய்துவிட்டார்கள் என்று நான் கூறமாட்டேன். கடந்த 1940-களில் இருந்து நாம் ஒருவிதமான வழியில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். அதைத் தொடர்ந்து நாம் பின்பற்றுகிறோம். நீங்கள் விரும்பும் வழியில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்கள். ஆனால், அதை விளையாட்டின் விதிமுறைக்கு உட்பட்டு என்று எதிர்பார்க்காதீர்கள்''.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x