Published : 05 Oct 2021 11:30 AM
Last Updated : 05 Oct 2021 11:30 AM
மகேந்திர சிங் தோனி மட்டும் பேட்டிங் செய்யத் திணறவில்லை. ஆடுகளமே கடினமாக இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
தோனி பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லையா அல்லது பேட்டிங் மறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. அவரின் பேட்டிங் முறை, ஸ்டைல் அனைத்தும் பழைய தோனி இல்லை என்பதையே கூறியது. 27 பந்துகளைச் சந்தித்த தோனி 18 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட தோனி அடிக்கவில்லை.
தோனி பந்துகளை வீணடிக்காமல் விரைவாக ஆட்டமிழந்து சென்றிருந்தால், ஜடேஜா களமிறங்கி சில ஷாட்களை அடித்திருப்பார். ஸ்கோராவது உயர்ந்திருக்கும். பேட்டிங் மறந்துவிட்டது போல் செயல்படும் தோனி, இனிவரும் போட்டிகளில் 8-வது 9-வது வீரராகக் கூட களமிறங்கலாம், தவறில்லை. நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர்களுக்கு தோனி வாய்ப்புகளை வழங்கி அழகு பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல் நேற்று டெல்லி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சிலும் ரன் சேர்க்க தோனி திணறினார். சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், அஸ்வினின் 16 பந்துகளைச் சந்தித்த தோனி அதில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
வேகப்பந்துவீச்சை விளாசுவார் என எதிர்பார்த்தபோது, வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, நோர்க்கியா, ஆவேஸ்கான் என 3 பேரின் பந்துவீச்சில் 11 பந்துகளைச் சந்தித்த தோனி 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 66 ஆகக் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் 136 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த தோனி, கடந்த 3 சீசன்களில் ஸ்ட்ரைக் ரேட் 96 ஆகக் குறைந்துவிட்டது.
தோனியின் பேட்டிங் கவலைக்குரியதாக மாறிவருவது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
''பேட்டிங்கில் தோனி மட்டும் திணறவில்லை, அனைவருமே திணறினார்கள். ஏனென்றால், ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. 137 ரன்கள் இந்த ஆடுகளத்தில் வெற்றி பெறப் போதுமானது. பெரிய ஷாட்களை அடிக்கவும், அதிகமான ரன்களைச் சேர்க்கவும் இரு அணி பேட்ஸ்மேன்களும் திணறினார்கள் என்பதை ஏற்க வேண்டும். சில நேரங்களில் உங்கள் பார்வை, நோக்கம், இலக்கு உயரமாக இருக்கலாம். நாங்களும் எங்களுக்கான வெற்றி, ஸ்கோருக்குத் தேவையான 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அவ்வளவுதான்.
இந்த 3 மைதானங்களிலும் என்ன மாதிரியான வேறுபாடு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதும் இந்தக் காலகட்டத்தில் கடினம். நாங்கள் கடந்த இரு போட்டிகளில் செய்த தவறுகளைத் திருத்த முயன்று வருகிறோம். டெல்லி அணி கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசியதால்தான் எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை''.
இவ்வாறு பிளமிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT