Last Updated : 05 Oct, 2021 07:56 AM

3  

Published : 05 Oct 2021 07:56 AM
Last Updated : 05 Oct 2021 07:56 AM

ஆடுகளம் கடினமாக இருந்தது; 150 ரன்களை அடித்திருக்கலாம்: தோல்விக்கு தோனி விளக்கம்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பதி ராயுடுவுடன் கேப்டன் தோனி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


150 ரன்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால், கிடைக்கவில்லை. வெற்றிக்காக கடைசி வரை போராடினோம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 13 போட்டிகளில் 10 வெற்றிகள், 3 தோல்விகள் என 20 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்தில் உள்ளது. தோனியிடமே வித்தையைக் கற்றுக் கொண்டு குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிட்டார் ரிஷப் பந்த். சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள், 4 தோல்விகள், என 18 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
போட்டியின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் கடுமையாக முயற்சி செய்தோம், கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்ற வீரர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. முதல் 6 ஓவர்களில் அதிகமாக எந்த ரன்களும் நாங்கள் கொடுக்காதது முக்கியமாக இருந்தது.

முதல் 6 ஓவர்களில் ஏதாவது ஒரு ஓவரில் அதிகமான ரன்கள் விடப்படும் சூழல் ஏற்படும், அது களத்தில் தரமான பேட்ஸ்மேன் இருக்கும் போது அதிக ரன்கள் செல்லும். ஆடுகளம் இரட்டிப்புத்தன்மையுடன் இருந்தது.

ஆடுகளம் ஒட்டுமொத்தமாக மந்தமாகவும் இல்லை. அதேநேரம் வேகப்பந்துவீச்சுக்கும் முழுமையாக சாதகமில்லாமல் இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்கள் சந்தித்த அதே பிரச்சினைகளை டெல்லி பேட்ஸ்மேன்களும் எதிர்கொண்டனர். நம்முடைய இயல்பான ஷாட்களை ஆடமுடியவில்லை.

அதேநேரம், உயரமான பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் நன்றாகப் பந்துவீச முடிந்தது. நாங்கள் 150 ரன்கள்வரை எட்டுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை. சில விக்கெட்டுகளை இழந்தபின் 15வது ஓவரிலிருந்து அடித்து ஆட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் எங்களால் ரன் ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஆடுகளம் கடினமானதாக இருக்கிறது என நினைத்தேன். 150 ரன்களை எட்டியிருந்தால் நல்லபடியாக இருந்திருக்கும்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x