Published : 05 Oct 2021 07:08 AM
Last Updated : 05 Oct 2021 07:08 AM
ஷிம்ரன் ஹெட்மயரின் பொறுப்பான பேட்டிங், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
டெல்லி முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 13 போட்டிகளில் 10 வெற்றிகள், 3 தோல்விகள் என 20 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்தில் உள்ளது. தோனியிடமே வித்தையைக் கற்றுக் கொண்டு குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிட்டார் ரிஷப் பந்த்.
சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகள், 4 தோல்விகள், என 18 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. இரு அணிகளுக்கும் இன்னும் தலா ஒரு போட்டி இருப்பதால், இரு அணிகளும் வெற்றி பெற்றால், டெல்லி முதலிடத்தைப் பிடிக்கும், ஒருவேளை டெல்லி தோற்று சிஎஸ்கே கடைசிப் போட்டியில் வென்றால், முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றில் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்.
சிஎஸ்கேவுக்கு சரிவு
சிஎஸ்கே அணியின் கடந்த 3 போட்டிகளின் செயல்பாடுகளைப் பாருங்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது, அடைத் தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.
கடந்த போட்டியில் 180 ரன்களுக்குமேல் அடித்தபோதிலும், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்கள் பேட்டிங்கில் வெளுத்துவாங்கி எளிதாக சேஸ் செய்தனர். இந்தப் போட்டியிலும் சிஎஸ்கே தோற்றுள்ளது. ஆதலால், சிஎஸ்கே அணி இந்த இரு தோல்விகள் குறித்து சுயஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தொடர்ந்து 4-வது முறையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டது என்றாலும், கடந்த இரு வெற்றிகளுமே குறைந்த ஸ்கோரை துரத்திச் சென்று அதை கடைசி ஓவரிலும், சில பந்துகள் மீதமிருக்கையிலும் சேஸிங் செய்வதாக இருக்கிறது. அடுத்து ப்ளே ஆஃப் செல்லும்போது இதுபோன்ற மனப்போக்கு ஆபத்தானது என்பதால், கடந்த 2 வெற்றிகளையும், பேட்டிங் வரிசைையயும் டெல்லி அணி ஆய்வுசெய்ய வேண்டும்.
காப்பாற்றிய ஹெட்மெயர்
டெல்லி அணியின் ஹெட்மெயர் மட்டும் கடைசி நேரத்தில் நிலைக்காமல் இருந்தால் வெற்றி சிஎஸ்கே வசம் சென்றிருக்கும். ஷிம்ரன் ஹெட்மெயர் 18 பந்துகளில் 28 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மிகமுக்கியமான கட்டத்தில் பிராவோ ஓவரில் 2 பவுண்டரிகள்அடித்தது, ஹேசல்வுட் பந்தில் ஒரு சிக்ஸர், என விளாசி டெல்லி அணியை தோல்வியிலிருந்து ஹெட்மெயர் காப்பாற்றினார்.
ஆட்டநாயகன்
ஆனால், ஆட்டநாயகன் விருது என்னவோ அக்ஸர் படேலுக்குதான் வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அக்ஸர் படேல் 6 டாட் பந்துகளை வீசினார், ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட தனது ஓவரில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை அடிக்கவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய டூப்பிளசி, மொயின் அலி இருவர் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியதால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சிஎஸ்கே அணியைச் சுருட்டியதில் டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி அஸ்வின், அக்ஸர் படேல் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர், சராசரியாக 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.
கட்டுக் கோப்பாக பந்துவீசிய அஸ்வினும் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்திதனார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடவில்லை. அதற்கு அடுத்தார்போல் ரபாடா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்தார் இதில் 12 டாட் பந்துகள் அடங்கும். இந்த மூவரின் பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் விக்கெட் சரிவுக்கும், ஸ்கோரைக் கட்டுக்கோப்பாக வைத்தற்கும் முக்கியக் காரணமாகும்.
தவண் பொறுப்பு
137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, தவண் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பிரித்வி ஷா 12 ரன்கள் சேர்த்த நிலையில் சஹர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிதானம் கூட்ட தவண் அதிரடியில் இறங்கினார். தவண் அடித்த இரு சிக்ஸர்களும் அரங்கில் சென்று சானிடைசர் மூலம் துடைத்துதான் பயன்படுத்தப்பட்டது. ஸ்ரேயாஸ்2 ரன்னில் ஹேசல்வுட்டிடம் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
தவண் மட்டும் நிலைத்து ஆட கேப்டன் ரிஷப் பந்த்(15) ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இந்தப் போட்டியில் அறிமுகமாகிய ரிப்பால் படேல் 18 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அஸ்வின் 2 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய தவண் 39 ரன்னில் தாக்கூரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
51 ரன்கள் வரை ஒரு விக்ெகட்டை இழந்திருந்த டெல்லி அணி அடுத்த 48 ரன்கள் சேர்ப்பதற்கு 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. ஷிம்ரன் ஹெட்மெயர், அக்ஸர் படேல் ஓரளவுக்கு களத்தில் நின்று அணியை வெற்றிக்கு நகர்த்தினர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய 18-வது ஓவரில் ஹெட்மெயர் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 12ரன்களையும், ஹேசல்வுட் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர் உள்ளிட்ட 10 ரன்கள் சேர்த்து ஹெட்மெயர் நம்பிக்கை அளித்தார்.
பிராவோ வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹெட்மெயர் 2 ரன்களும், 2-பந்தில் வைடுடன் சேர்த்து 3 ரன்கள் ஓடினர். 3-வது பந்தை அக்ஸர் படேல் சந்தித்தநிலையில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரபாடா ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஹெட்மெயர் 28 ரன்களிலும், ரபாடா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடக்கம் ஏமாற்றம்
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அம்பதி ராயுடுவின் அரைசதம் மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல். பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. பந்துவீச்சு இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால், டெல்லி அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்திருக்க முடியும்.
ஆனால், தீபக் சஹர், பிராவோ ஆகியோர் கடைசி நேரத்தில் இன்னும் கட்டுக் கோப்பாக வீசியிருக்கலாம். 136 ரன்கள் என்பது டிபென்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை என்றாலும், சிஎஸ்கே அணியிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால் வெற்றி பெற்றிருக்க முடியும்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கெய்க்வாட், டூப்பிளசி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். நோர்கியா வீசிய முதல் ஓவரிலேயே கெய்க்வாட் 16 ரன்கள் சேர்த்தார், டூப்பிளசிஸும் 2 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால், ஆவேஷ் கான் பந்துவீச்சில் டூப்பிளசி 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நோர்க்கியா பந்துவீச்சில் கெய்க்வாட்13 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிஎஸ்கே அணியில் முதல்முறையாக வாய்ப்புப் பெற்ற உத்தப்பா 19 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு, தோனி கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.
தோனி பேட்டிங் பயிற்சி எடுக்கவி்ல்லையா அல்லது பேட்டிங் மறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. அவரின் பேட்டிங் முறை, ஸ்டைல் அனைத்தும் பழைய தோனி இல்லை என்பதையே கூறியது. 27 பந்துகளைச் சந்தித்த தோனி 18 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட தோனி அடிக்கவி்ல்லை.
தோனி பந்துகளை வீணடிக்காமல் விரைவாக ஆட்டமிழந்து சென்றிருந்தால்,ஜடேஜா களமிறங்கி சில ஷாட்களை அடித்திருப்பார் ஸ்கோராவது உயர்ந்திருக்கும். பேட்டிங் மறந்துவிட்டது போல் செயல்படும் தோனி, இனிவரும் போட்டிகளில் 8-வது 9-வது வீரராகக் கூட களமிறங்கலாம் தவறில்லை. நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்களுக்கு தோனி வாய்ப்புகளை வழங்கி அழகு பார்க்கலாம்.
ராயுடு 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்ளிட்ட 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT