Last Updated : 04 Oct, 2021 06:45 AM

 

Published : 04 Oct 2021 06:45 AM
Last Updated : 04 Oct 2021 06:45 AM

ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த கொல்கத்தா: கில் கில்லி: 151 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டிய காஷ்மீர் வீரர்  

வெற்றிபெற்ற கேகேஆர் கேப்டன் மோர்கனுக்கு வாழ்த்துத் தெரிவித்த வில்லியம்ஸன் | படம் உதவி ட்விட்டர்

துபாய் 


ஷுப்மான் கில்லின் அரைசதம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 49-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றில் 4வது இடத்தில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 6 வெற்றிகள் 7தோல்விகள் என 12 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்துவரும் கடைசி ஒரு போட்டியிலும் கொல்கத்தா அணி நல்ல ரன்ரேட்டில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம்.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி தங்களுக்கு இருக்கும் 2 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டாலே கொல்கத்தா அணி இயல்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்றுவிடும். அடுத்துவரும் ஒரு போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும்போது ரன்ரேட்டை தக்கவைக்கும் வகையில் எதிரணியை குறைந்த ரன்னில் சுருட்டி, குறைந்த ஓவரில் சேஸிங் செய்ய வேண்டும்.

அவ்வாறு நடந்தால், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்துவரும் 2 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது. கொல்கத்தா அணி அடுத்த போட்டியில் தோல்வி அடைந்து, மும்பை அணி இரு போட்டிகளி்ல் வென்றால்தான் மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

மும்பை இந்தியன்ஸுக்கு போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரன்ரேட்டில் கடும் போட்டியளிக்கிறது. அடுத்துவரும் இரு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நல்ல ரன்ரேட் வைத்து வென்றுவிட்டால், ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. , கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு கடைசிப் போட்டியில் கிடைக்கும் வெற்றியில் அமைந்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே போட்டியிலிருந்து கணிதரீதியாக வெளியேறிவிட்டது. இதுவரை 12 போட்டிகளில் 2 வெற்றிகள், 10 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

கில், பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் ஷுப்மான் கில், பந்துவீச்சாளர்கள் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, சஹிப் அல் ஹசன் ஆகியோர்தான் காரணம். 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட்டை கட்டிப்போட்டனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 58 ரன்கள் மட்டுமே கொடுத்தனர், சராசரியாக ஓவருக்கு 4 ரன்ரேட் வீதம் மட்டுேம வழங்கி கட்டுப்படுத்தினர். இதில் வருண் 2 விக்கெட்டுகளையும், சஹப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

வேகப்பந்துவீச்சில் ஷவம் மாவி, சவுதி இருவரும் கட்டுக்கோப்பாக, லைன் லென்த்தில் வீசி சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தனர். குறிப்பாக தொடக்கத்திலேயே விருதிமான் சாஹாவை தனது பந்துவீச்சில் சவுதியும், மாவி தனது வேகத்தில் ஜேஸன் ராயையும் வெளியேற்றி சன்ரைசர்ஸ் பேட்டிங்கை குலைத்தனர்.

எளிதான இலக்கை சேஸிங் செய்ய காரணமாக இருந்த ஷுப்மான் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 51 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து(10பவுண்டரிகள்) கில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

உம்ரான் மாலிக்

இந்தப் போட்டியில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு வீரர் சன்ரைசர்ஸ் அணியின் கண்டுபிடிப்பான வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரைச் சேர்ந்த உம்ரான் மாலிக், சன்ரைசர்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளரா இருந்தவரை, நடராஜனுக்கு மாற்றாக களமிறக்கியது.

தனது முதல் போட்டியிலேயே உம்ரான் மாலிக் 151 கி.மீ வேகத்தில் பந்துவீசி நிதிஷ் ராணா, கில்லை மிரட்டினார். ஐபிஎல் தொடரில் 3-வது அதிகபட்சமாக 151 கி.மீ வேகத்திலும், குறைந்தபட்சமாக 131 கி.மீ வேகத்திலும் சராசரியாக 143 கிமீ வேகத்திலும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். இதுபோன்ற இளம் வீரர்களை சன் ரைசர்ஸ் அணி தொடக்கத்திலேயே பயன்படுத்தியிருந்தால், மோசமான தோல்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

மந்தமான ஆடுகளத்தில் லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசுவது கடினம், அதை இளம் வீரர் உம்ரான் மாலிக் சரியாகச் செய்துள்ளார். உம்ரான் மாலிக் பந்துவீச வந்தபோதெல்லாம் கொல்கத்தா ரன்ரேட் குறையத் தொடங்கியது அவரின் பந்துவீச்சு வலிமையைக் காட்டியது. ஏற்கெனவே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் சமது விளையாடி வரும்நிலையில் உம்ரான் மாலிக் 2-வது வீரராவார்.

போராடிய சன்ரைசர்ஸ்

116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. எளிதான இலக்குதான் ஆனாலும், கொல்கத்தா அணி இதை கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் எட்டியது. இதனால்தான் கொல்கத்தா அணியின் நிகர ரன்ரேட் உயரவில்லை.

116 ரன்கள் சேர்த்தது வெற்றி பெறக்கூடிய இலக்கு இல்லை என்றபோதிலும் சன்ரைசர்ஸ் அணி தன்னுடைய இளம் பந்துவீச்சாளர்களை வைத்து, டிபென்ட் செய்ய கடுமையாக முயன்று, நெருக்கடி கொடுத்ததை ஏற்கத்தான் வேண்டும். ஏற்குறைய கொல்கத்தா அணியும் 58 டாட் பந்துகளைச் சந்தித்துதான் இந்த கடினமான வெற்றியைப் பெற்றது.

விக்கெட் சரிவு

குறிப்பாக புவனேஷ்வர் குமார், ஹோல்டர், ரஷித்கான், மாலிக் ஆகிய 4 பேரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதில் உம்ரான்மாலிக் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்தார் இதில் 13 டாட் பந்துகள் அடங்கும்.
கொல்கத்தா அணிக்கு கடந்த சில போட்டிகளாக நல்ல தொடக்கத்தை அளித்த வெங்கடேஷுக்கு ஷாட் ஏதும்மீட் ஆகவில்லை, (8) ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் விரைவாக வெளியேறினார். பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

அடுத்துவந்த திரிபாதி 6 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த சில போட்டிகளாக விரைவாக ஆட்டமிழந்த ஷுப்மான் கில் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடத் தொடங்கி, ஃபார்முக்குத் திரும்பினார்.

ஃபார்முக்குத் திரும்பிய கில்

3-வது வி்க்கெட்டுக்கு வந்த ராணா, கில்லுக்கு ஒத்துழைத்தார். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். ஓரளவுக்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட ஷுப்மான் கில் அதன்பின் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 93 ரன்கள் வந்தபோது கில் 57 ரன்னில் சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ராணா 25 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், மோர்கன் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கார்த்திக் 18 ரன்களிலும் மோர்கன் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பேட்டிங் மோசம்

முன்னதாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. முதல் ஓவரின் 2-வத பந்தில் விருதிமான் சாஹா கால்காப்பில் வாங்கி சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது ஓவரில் ஜேஸன் ராய் 10 ரன்னில் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்துவந்த வில்லியம்ஸன் 4 பவுண்டரிகளை மாவி பந்துவீச்சில் அடித்து ரன் ரேட்டை உயர்த்த முயன்றார். ஆனால், வில்லியம்ஸன் 26 ரன்கள் சேர்த்த நிலையில் சஹிப் அல் ஹசனால் ரன்அவுட் ெசய்யப்பட்டார். அதன்பின் வந்த வீரர்களும் பெரிதாக பேட்டிங்கில் சோபிக்கவில்லை. பிரியம் கார்க்(21), அபிஷேக் சர்மா(6), அப்துல் சமது(25), ஹோல்டர்(2), ரஷித் கான்(8) என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.

கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்கள் நரேன், வருண், சஹிப் அல் ஹசன் மூவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் நெருக்கடிகொடுத்தனர். இதில் நரேன் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

புவனேஷ்வர் 7 ரன்களிலும், கவுல் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x