Published : 06 Mar 2016 04:01 PM
Last Updated : 06 Mar 2016 04:01 PM

ஷோயப் அக்தர் இந்தியாவைப் புகழ்வதெல்லாம் பணத்திற்காகத்தான்: சேவாக் கருத்து

சமீப காலங்களில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இந்தியாவைப் புகழ்ந்து கூறுவதற்கு வர்த்தகக் காரணங்களே பிரதானம் என்று விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

டெக்கான் கிரானிக்கிள் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஷோயப் அக்தர் நல்ல நண்பரானதுக்குக் காரணம் அவர் இந்தியாவில் வர்த்தகம் ஒன்றை நிறுவ விரும்புகிறார் என்பதே. அதனால்தான் இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறார், இதன் மூலம் வர்ணனை செய்வதன் மூலம் சம்பாதிக்க விரும்புகிறார் என்று தெரிகிறது.

இப்போதெல்லாம் அக்தரைப் பார்த்தால், இந்தியாவை நிரம்பவும் புகழ்ந்து பேசுகிறார். அவர் தன் வாழ்நாளில் இந்தியாவை இவ்வளவு புகந்து பேசியிருப்பதை இதற்கு முன்னர் ஒருவரும் பார்த்திருக்க முடியாது.

நான் ஆடிய காலத்தில் அவர் எனக்கு வீசும் போது எந்த ஒரு கருணையும் இருக்காது. பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்” என்றார்.

சேவாக்கின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ரானா நவேத் உல் ஹசன் கூறும்போது, “சேவாக் கூறுவது சரியாக இருக்கலாம். ஏனெனில் அவரும் இந்திய தொலைக்காட்சி சேனலில் ஒரு வாய்ப்பைத் தேடி இருக்க வாய்ப்புள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேவாகிற்கு கம்பெனி கொடுக்க அக்தரையே அழைக்க முடியும்.

இப்போதெல்லாம் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் மொகமது யூசுப், சக்லைன் முஷ்டாக் போன்றவர்கள் பாகிஸ்தான் டிவிக்காக பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் இந்திய தொலைக்காட்சி பக்கம் வர விரும்புகின்றனர், காரணம் இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை. எனவே இந்தியாவில் ரூ.1 லட்சம் கிடைத்தால் பாகிஸ்தானில் கிடைக்கும் ரூ.2 லட்சத்துக்கு சமமாகும்” என்றார்.

இந்நிலையில் சேவாக் இன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஷோயப் அக்தர் பற்றிய கருத்து குறித்து கேட்ட போது, “நான் நகைச்சுவையாகக் கூறினாலும் நான் அவ்வாறே உணர்கிறேன், அதைத்தான் நானும் தெரிவித்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x