Published : 17 Mar 2016 09:24 AM
Last Updated : 17 Mar 2016 09:24 AM
மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதமடித்து தாண்டவமாட, இங்கிலாந்தை நசுக்கியது மே.இ.தீவுகள்.
உலகக்கோப்பை கிரிக்கெட் டி20யில் கெயிலின் இந்த 47 பந்து சதமே அதிவேக அதிரடி சதமாகும்.
மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் இங்கிலாந்து மிக அருமையாக பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 11 அசுர சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மொத்தத்தில் கெயிலின் ஆக்ரோஷ மட்டை சுழற்றலுக்கு சிக்கிய இங்கிலாந்து அணி, வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் ‘இரட்டை டயர் லாரியில மாட்டிக்கிட்ட எலிக்குஞ்சு’ போல் ஆனது. ஆனால் பனிப்பொழிவு நிச்சயம் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு பெரிய ஒரு தடையாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. பந்தை கிரிப் செய்ய முடியவில்லை இதனால் புல்டாஸ்கள் அதிகம் விழுந்தன.
தென் ஆப்பிரிக்க வீரர் லெவி 45 பந்துகளில் அடித்த சதம்தான் டி20 உலக சாதனையாகும், இவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் உள்ளார், இவர் 46 பந்துகளில் சதம் எடுத்துள்ளார். தற்போது வான்கடேயில் கெயில் 47 பந்துகளில் சதம் கண்டு 3-ம் இடத்தில் உள்ளார். மேலும் உலகக்கோப்பை டி20-யில் 11 சிக்சர்கள் அடித்து கெயில் அதிக சிக்சர்களை அடித்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது 2007 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தான் அடித்த 10 சிக்சர்கள் சாதனையை அவரே நேற்று முறியடித்தார்.
கெயில் மட்டைக்கு சிக்கியவர் மொயின் அலி, இவரது 14 பந்துகளில் 33 ரன்கள் விளாசப்பட்டது. இதில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள். அதுவும் எல்லாமே நேராக அடிக்கப்பட்ட சிக்சர்கள்.
மைதானத்தில் பனிப்பொழிவு இருந்ததால் மே.இ.தீவுகள் 85/2 என்ற நிலையில் வலுவாக இருந்த போது, மைதானத்தில் ஈரம் காய வைக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டது, வழக்கத்துக்கு மாறான ஒரு இடையூறாக அமைந்தது. ஆனால் ஆட்டம் ஒருதலைபட்சமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இது செய்யப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ் ஒரு ஓவரில் பந்தின் ஈரம் காரணமாக சரியாக வீச முடியாமல் மர்லன் சாமுயெஸ்ல்ஸுக்கு 3 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தார். இதில் ஜோர்டான் பனிப்பொழிவு காரணமாக மிக மோசமாக மிஸ் பீல்ட் செய்து பவுண்டரி விட்டதும் அடங்கும்.
சாமுயெல்ஸ் அடித்துக் கொண்டிருக்கும் போது கிறிஸ் கெயில் ரன்னர் முனையில் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. முதல் ஓவரில் டோப்லியை இரண்டு பவுண்டரிகள் அடித்ததோடு சரி. 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த சாமுயெல்ஸ், அடில் ரஷித் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகுதான் அடில் ரஷீத்தை 2 சிக்சர்கள் விளாசினார் கெயில். இதில் ஒன்று மிகப்பெரிய சிக்ஸ், 89 மீட்டர்கள் சிக்ஸ் என்று டிவியில் காண்பிக்கப்பட்டது. தினேஷ் ராம்தின், டிவைன் பிராவோ ஆகியோர் இடையில் ஆட்டமிழந்தனர், பிராவோ புல்டாஸில் அவுட் ஆனார். பந்து வழுக்கியதால் இங்கிலாந்து நிறைய புல்டாஸ்களை வீசியது.
கடைசியில் ஆந்த்ரே ரசல், கெயிலுடன் நின்றார். அவர் 16 நாட் அவுட், கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 100 நாட் அவுட். பென் ஸ்டோக்ஸ் பாவம் 3 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார். காரணம் பந்தின் ஈரத்தினால் புல்டாசாக விழுந்தது. கிறிஸ் ஜோர்டான் மட்டுமே 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். பந்து வழுக்கிய போதும் இவர் கெயிலுக்கு யார்க்கர்களை துல்லியமாக வீசினார். ஆனால் கெயில் இந்த யார்க்கர்களை தடுத்தாடி விட்டார். அதில் ஏதாவது ஒன்றை அவர் விட்டிருந்தால் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் கூட திரும்பியிருக்கலாம், ஆனால் கெயில் நேற்று முடிவுகட்டிவிட்டார்.
முன்னதாக இங்கிலாந்து டாஸ் வென்று நன்றாக ஆடியது, பார்க்க பசுந்தரை ஆடுகளம் போல் தெரிந்தாலும் ஸ்விங் இல்லவே இல்லை. அலெக்ஸ் ஹேல்ஸ், சாமுயேல் பத்ரீயை 3 பவுண்டரிகள் அடித்தார். ஜேசன் ராய், ஆந்த்ரே ரசல் பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹேல்ஸை அருமையான யார்க்கரில் வீழ்த்தினார் சுலைமான் பென். ஜோ ரூட் மிக அருமையான தனது பார்மை மீண்டும் நிரூபித்தார், ஹேல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 12-வது ஓவரில் 92 ரன்களில் இருந்தது என்றால் அதற்குக் காரணம் ஜோ ரூட்டின் அருமையான ஆட்டமே. 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். கிறிஸ் பட்லர் 3 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். மோர்கன் 14 பந்துகளில் 27 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 2 பந்துகளில் 1 சிக்சருடன் 7 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 182 ரன்கள் எடுத்தது.
ஆனால் பனிப்பொழிவும், கிறிஸ் கெய்லும் நேற்று இங்கிலாந்து விதியை தீர்மானித்தனர். கெயில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
எந்த அணியும் இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை, அது இம்முறை நிகழ்ந்ததென்றால் மே.இ.தீவுகள் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT