Published : 27 Sep 2021 05:33 PM
Last Updated : 27 Sep 2021 05:33 PM

சிஎஸ்கேவை வீழ்த்த 40 ஓவர்களிலும் நல்ல கிரிக்கெட் விளையாடுவது அவசியம்: சேவாக் புகழாரம்

சிஎஸ்கே அணி | படம் உதவி: ட்விட்டர்.

அபுதாபி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் டி20 போட்டியில் 40 ஓவர்களிலும் நல்ல கிரிக்கெட் விளையாடினால்தான் வெல்ல முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 172 ரன்களை சேஸிங் செய்து 2 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வென்றது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோற்றுவிடும் என்று எதிர்பார்த்தபோது 19ஓவரில் 4 பந்துகளில் ஜடேஜா அடித்த 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் ஆட்டத்தைத் திசைதிருப்பியது.

நரேன் வீசிய கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 4 ரன்கள் எடுக்க வேண்டியதிருந்தது. தாக்கூர் 3 ரன்கள் எடுத்த நிலையில் 3 பந்துகளில் ஒரு ரன் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் நரேன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டபோது, சஹர் ஒரு ரன் அடித்து வெற்றிபெற வைத்தார். தோனியின் அருமையான கேப்டன்ஷிப்புக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி எனப் புகழப்பட்டது.

இந்த வெற்றி குறித்து இணையதளம் ஒன்றுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''ஐபிஎல் சீசன் 2-வது பகுதிக்காக ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் சிஎஸ்கே அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடும்போது, அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்பது தெரிந்த உண்மைதான். ஆனால், பந்துவீச்சில் சிஎஸ்கே பலவீனமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில்கூட கொல்கத்தா அணியை 150 முதல் 160 ரன்களில் சுருட்டியிருக்கலாம். ஆனால், 171 ரன்கள் அடிக்கவிட்டனர்.

ஆனால், சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்திருந்தால், 160 முதல் 170 ரன்கள் சேர்த்திருப்பார்கள், அந்த ஸ்கோரையும் டிபென்ட் செய்ய மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியிடம் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டக்கூடிய வீரர்கள் இல்லை. குறிப்பாக மிஸ்ட்ரி ஸ்பின்னர் இல்லை. அதுதான் சிஎஸ்கே பிரச்சினை.

மற்ற வகையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது, ஷர்துல் 9 அல்லது 10-வது இடத்தில் வந்தாலும் அவரால் பேட்டிங் செய்ய முடியும். நடுவரிசையில் களமிறங்கினாலும் அதற்கு ஏற்ப விளையாடுவார். இங்கிலாந்தில் அவரின் பேட்டிங்கைப் பார்த்திருக்கிறோம்.

சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தால்தான் சவால் காத்திருக்கிறது. எவ்வாறு திட்டமிடுவார்கள், விளையாடுவார்கள் என்பதை கவனிக்கலாம். சிஎஸ்கே சிறந்த அணி. அவர்களை எளிதாக வெல்ல முடியாது என ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒட்டுமொத்த போட்டியிலும் சிஎஸ்கேவுக்கு எதிராகக் கடினமாக உழைக்க வேண்டும்.

நாம் ஆஸ்திரேலிய அணியைப் பற்றிக் கூறும்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 40 ஓவர்களும் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கூறுவோம். அதேபோலத்தான் சிஎஸ்கே அணியை வீழ்த்த டி20 போட்டியில் 40 ஓவர்களிலும் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்''.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x