Last Updated : 27 Sep, 2021 04:39 PM

 

Published : 27 Sep 2021 04:39 PM
Last Updated : 27 Sep 2021 04:39 PM

முதல் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி: டி20 போட்டியில் புதிய மைல்கல்

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

துபாய்

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் சேர்த்த முதல் இந்திய பேட்ஸ்மேன், உலக அளவில் 5-வது பேட்ஸ்மேன் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.

துபாயில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் கோலி சிக்ஸர் அடித்தபோதுதான் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.

விராட் கோலி இதுவரை 299 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் சராசரியாக 41.61 ரன்கள், 5 சதங்கள், 73 அரை சதங்களை கோலி அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் கோலி அதிகமான ரன் சேர்த்தவர் அல்ல, சர்வதேச அரங்கிலும் டி20 போட்டித் தொடரிலும் அதிகமான ரன் குவித்த வீரர் பட்டியலில் கோலி உள்ளார். இந்திய அணிக்காக 84 போட்டிகளில் ஆடிய கோலி, 3,159 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சராசரி 52.65. சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 28 அரை சதங்களை கோலி அடித்துள்ளார்.

ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்டி முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் சாதனையைப் படைத்துள்ளார். உலக அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

மே.இ.தீவுகள் கிறிஸ் கெயில் டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களும், கெய்ரன் பொலார்ட், பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களையும் எட்டியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஹர்ஸல் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஸல் படேலின் சிறப்பான பந்துவீச்சு வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.

ஹர்ஸல் படேல் 17-வது ஓவரை வீசுகையில் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியாவும், 2-வது பந்தில் கெய்ரன் பொலார்டும், 3-வது பந்தில் ராகுல் சாஹரும் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். ஹர்ஸல் படேல் ஐபிஎல் தொடரில் எடுத்த முதல் ஹாட்ரிக் விக்கெட் என்றபோதிலும் ஆர்சிபிக்கு இது 3-வது வீரராகும். இதற்குமுன் பிரவின் குமார், மே.இ.தீவுகள் வீரர் சாமுவேல் பத்ரி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x