Last Updated : 27 Sep, 2021 03:00 PM

1  

Published : 27 Sep 2021 03:00 PM
Last Updated : 27 Sep 2021 03:00 PM

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி | கோப்புப் படம்.

லண்டன்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பர் மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நிலையில் அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் சேர்த்துள்ள மொயின் அலி, சராசரியாக 28.29 என வைத்துள்ளார். இதில் 5 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும். வலது கை ஸ்பின்னரான மொயின் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பயிற்சியாளர் சில்வர்வுட் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார். மொயின் அலி விடுத்த அறிக்கையில், “கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடவும், நீண்டநாள் விளையாடவும் விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் சாதித்த விஷயங்கள், ரன்கள், விக்கெட்டுகள் எனக்கு மகிழ்ச்சிக்குரியவை.

தற்போது எனக்கு 34 வயதாகிறது, நீண்ட காலம் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் வியப்புக்குரியது. நல்ல நாளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைந்தால், டி20, ஒருநாள் போட்டியைவிட சிறப்பானதாக டெஸ்ட் போட்டி அமையும். அதிகமான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்து, நாம் கற்றுக்கொள்ள முடியும்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி இருக்கிறேன். அதன் ஆழம் சில நேரங்களில் தீவிரமானது, நான் அதிகமாகச் செய்திருக்கிறேன் என நான் உணர்கிறேன். நான் பங்கேற்றுப் போட்டியிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய பயிற்சியாளர்கள் பீட்டர் மூர், கிறிஸ் சில்வர்வுட் ஆகியோருக்கு நன்றி. ரூட் தலைமையில் கீழ் நான் அனுபவித்து விளையாடியுள்ளேன்.

என் குடும்பம், பெற்றோர்தான் பிரதானம். அவர்களின் ஆதரவின்றி நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஒவ்வொரு போட்டியும் அவர்களுக்காகவே விளையாடினேன். என்னைப் பார்த்து அவர்கள் பெருமைப்படுவார்கள் என எனக்குத் தெரியும். நீண்ட காலத்துக்கு எனது குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருந்து விளையாடுவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20, ஒருநாள் போட்டி, லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்''.

இவ்வாறு மொயின் அலி தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 தொடரில் தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று மொயின் அலி விளையாடி வருகிறார். இதற்கு முன் ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயின் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்தில் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும்தான் மொயின் அலி வாய்ப்பு பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x