Last Updated : 25 Sep, 2021 08:37 AM

1  

Published : 25 Sep 2021 08:37 AM
Last Updated : 25 Sep 2021 08:37 AM

ஓட்டம், நடை, சிட்டிங் இதுதான் ஆர்சிபி; தொடர்ந்து 7-வது தோல்வி: ஈஸி சேஸிங்; சிஎஸ்கே மீண்டும் முதலிடம்

வெற்றிக்குப்பின் ஆர்சிபி வீரரிடம் வாழ்த்துக் கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ரெய்னா | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா

பிராவோவின் பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 9 போட்டிகளில் 7 வெற்றிகள், 2 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி இருக்கிறது.

7-வது தோல்வி

ஆர்சிபி அணி 2-வது சுற்றில் சந்திக்கும் 2-வது தோல்வியாகும். கடந்த சீசனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து சந்திக்கும் 7-வது தோல்வியாகும். இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி மிக மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளை நல்ல ரன்ரேட்டில் வெல்லாவிட்டால், புள்ளிகள் இருந்தாலும், கடைசி நேரத்தில் ப்ளேஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர் பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பிராவோ 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4-வது முறை

ரெய்னா 17 ரன்களுடனும், தோனி 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஐபிஎல் தொடரில் இருவரும் சேஸிங்கில் 4-வது முறையாக ஆட்டத்தை முடித்து வைத்துள்ளனர்.

ஆர்சிபியிடம் அரிது

ஆர்சிபி அணியைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், இப்படிப் போவோம் அல்லது அப்படிப் போவோம் என்ற ரீதியில்தான் விளையாடுகிறார்கள். தொடக்க வரிசை சிறப்பாக இருந்தால், நடுவரிசை வீரர்கள் கவிழ்த்துவிடுகிறார்கள், நடுவரிசை சிறப்பாக இருந்தால் தொடக்க வரிசை சொதப்பி விடுகிறார்கள். ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் என்பது ஆர்சிபியில் அரிதாகவே இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7-வது ஆட்டத்தில், 7-வது தோல்வியை ஆர்சிபி அணி சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் 92 ரன்னில் ஒட்டுமொத்த பேட்டிங்கிலும் ஆர்சிபி கொலாப்ஸ் ஆனது.

ஓபனிங்ஓகே....பினிஷிங்

ஆனால், இந்த ஆட்டத்தில் “ ஓபனிங்கெல்லாம் நல்லாதான்யா இருக்கு, பினிஷிங் சரியில்லையே” என்ற நடிகர் வடிவேலுவின் வசனம் போல், கோலி-படிக்கல் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.

100 மீட்டர் ஓட்டப் பந்தய வேகத்தில் ஓடிய ஆர்சிபி ரன்ரேட், பின்னர் நடைப் போட்டியாக மாறி, கடைசியில் உட்கார்ந்துவிட்டது.

13 ஓவர்கள் வரை 111 ரன்களுக்கு எந்தவிக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அணியின் ஸ்கோர் எப்படியும் 190 ரன்களை எட்டும் என கணக்கிடப்பட்டது. ஏனென்றால், ஏபிடிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேவிட் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்ததால் நல்ல ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

16 ரன்னுக்கு 4 விக்கெட்

ஆனால், அடுத்த 7 ஓவர்களில் வெறும் 45 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்ததை என்னவென்று குறிப்பிடுவது. அதிலும் கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்குள் இழந்தது ஆர்சிபி அணி.
அதிலும் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை ேசர்த்து ஆர்சிபி அணி அசைக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. கோலி, படிக்கல் ஆட்டமிழந்தபின் ஆர்சிபியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

இது நடந்தால் ஆர்சிபிக்கு வெற்றி

அதிலும் ஷார்ஜா போன்ற சிறிய மைதானத்தில் 156 ரன்கள் என்றஸ்கோரை வைத்துக் கொண்டு சிஎஸ்கே போன்ற ஜாம்பவான்களைக் கொண்ட அணியை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதற்கு திறமையான பந்துவீச்சாளர்கள் தேவை, அது ஆர்சிபியில் இல்லை என்றபோதே தோல்வி உறுதியானது.

157 ரன்களை எட்ட முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வி அடையும் என்று கணக்கிட்டால் ஒன்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமட்டமாக இருக்க வேண்டும், அல்லது ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மிகப்பிரமாதமாக இருக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால்தான் ஆர்சிபி வெற்றி சாத்தியம். ஆனால், இரண்டுக்கும் வாய்ப்பில்லை ராஜா…. என்ற போதே சிஎஸ்கே வெற்றி உறுதியானது.

நல்ல தொடக்கம்

விராட் கோலி(53), படிக்கல்(70) ரன்கள் அருமையான தொடக்கத்தை அளித்தனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசித் தள்ளினர். இருவரையும் பிரிக்க சிஎஸ்கே கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் 53 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் கோலி ஆட்டமிழந்தார்.

கேப்டன் விராட் கோலி தனக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தி பேட்டிங் செய்தார், பீல்டிங்கிலும் கெய்க்வாட்டுக்கு அருமையான கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல், கேப்டன் பதவியிலிருந்து விலகப் போகும் நேரத்தில் கோலி தனக்குரிய பணியை சிறப்பாகச் செய்துள்ளார்.

ஏபிடி சொதப்பல்

அடுத்துவந்த டிவில்லியர்ஸ், படிக்கலுடன் சேர்ந்தார். இருவரின் அதிரடியால் ஸ்கோர் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. டவில்லியர்ஸும் அதற்கேற்றார்போல் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டினார். ஆனால், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் டிவில்லியர்ஸ்(12), படிக்கல்(70 5பவுண்டரி, 3 சிக்ஸர் ) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆர்சிபிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆர்சிபியின் நம்பிக்கை நாயகன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து 2-வது போட்டியிலும் சொதப்பினார். கடந்த போட்டியில் டக்அவுட்ஆகிய டிவல்லியர்ஸ் இதில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்

பாவம் மேக்ஸ்வெல் !

இந்த சீசனின் 2-வது பாதி தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் திணறிவரும் மேக்ஸ்வெல் இந்த ஆட்டத்திலும் சொதப்பினார்.

பாவம் மேக்ஸ்வெல் என்ன செய்வார்…. டைமிங் கிடைக்கவில்லை,பந்து பேட்டில் மீட் ஆகவில்லை. பிராவோவின் பந்துவீச்சில் தொடர்ந்து திணறிய மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் உள்ளி்ட்ட 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த டிம் டேவிட்(1) சஹர் பந்துவீச்சிலும், ஹர்ஸல் படேல்(3) ரன்னில் பிராவோ பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். 140 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 16 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.

எளிதான சேஸிங்

157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. கெய்க்வாட், டூப்பிளசிஸ் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் எந்த விதமான சிரமும் இல்லாத வகையில் ரன்களைச் சேர்த்தனர். அந்த அளவுக்கு ஆர்சிபி அணியின் பந்துவீச்சு அமைந்திருந்தது. பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது.

பவுண்டரி, சிக்ஸர் அடிக்க டூப்பிளசிஸ், கெய்க்வாட்டுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையி்ல்தான் ஆர்சிபி வீரர்கள் தவறான இடத்தில் பந்தை பிட்ச் செய்து பந்துவீசினர். ஆர்சிபி பந்துவீச்சைப் பார்த்து பலமுறை கோலியின் முகம் மாறியது.

ராயுடு, மொயின் அலி

கெய்க்வாட் 38 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொயின் அலி, அம்பதி ராயுடு இருவரும் 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்குநகர்த்தினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

2 சிக்ஸர் உள்பட23 ரன்கள் சேர்த்த மொயின் அலி ஹர்ஸல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்ஸல் படேல்பந்துவீச்சில் ராயுடு 33 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

சின்ன தல ரெய்னா, தல தோனி இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரெய்னா 17 ரன்னிலும் தோனி 11 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x