Last Updated : 23 Sep, 2021 08:32 AM

 

Published : 23 Sep 2021 08:32 AM
Last Updated : 23 Sep 2021 08:32 AM

டெல்லி மீண்டும் முதலிடம்: நார்ஜே, ரபாடா வேகத்தில் கொலாப்ஸான சன்ரைசர்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த நார்ஜே | படம் உதவி ட்விட்டர்

துபாய்


நார்ஜே, ராபாடா ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

குறைந்தபட்சம் 6 வெற்றிகளைப் பெற்றால்மட்டுமே சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்பதால் ஏறக்குறைய போட்டித் தொடரிலிருந்து சன்ரைசர்ஸ் வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது.

4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்ரிச் நார்ஜே ஆட்டநாயகன் விருது பெற்றார். நார்ஜே வீசிய ஒரு பந்து மட்டுமே 128 கி.மீவேகத்தில் ஸ்லோ பாலாக களத்தில் விழுந்தது, மற்ற அனைத்துப் பந்துகளுமே சராசரியாக 140 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டன. அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை நார்ஜே திணறவிட்டார்.

நார்ஜேவுக்கு துணையாக காகிசோ ரபாடாவின் பந்துவீச்சும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை வதக்கி எடுத்தது. ரபாடாவின் துல்லியமான லைன் லென்த், பாடிலைன் பந்துவீச்சு, பவுன்ஸர் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

ரபாடா 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு தென் ஆப்பிரிக்க வீரர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். ரவிச்சந்திர அஸ்வின் 2.5 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி இருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வினின் பந்துவீச்சு நேற்று எடுபடவி்ல்லை. அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை நார்ஜே, ரபாடா அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். நார்ஜேயின் வேகப்பந்தில் பேட்டில் எட்ஜ் எடுத்து தொடக்கத்திலேயே மிகப்பெரிய விக்கெட்டை வார்னர் வெளியேறினார். அடுத்து கேதார் ஜாதவை 3 ரன்னில் கால்காப்பில் வாங்கச் செய்து நார்ஜே வெளிேயற்றினார். கேதார் ஜாதவுக்கு நார்ஜே வீசிய பந்து மணிக்கு 147 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்தது, அதை தடுக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி ஜாதவ் வெளியேறினார்.

ரபாடாவின் 5-வது ஓவரில் விருதிமான் சாஹா ஒரு சிக்ஸர் அடித்தார். அதேஓவரில் சாஹாவுக்கு பவுன்ஸர் வீசி திணறவிட்டு தவணிடம் விக்ெகட்டை பறிகொடுக்க வைத்த ரபாடாவின் பந்துவீச்சு அபாரம். மணிஷ் பாண்டேவுக்கும் அதிவேகமாக வீசப்பட்ட பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து ரபாடாவிடம் கேட்சானது.

சன்ரைசர்ஸ் அணியில் ஓரளவுக்குப் பேட் செய்த அப்துல் சமதுவையும் ரபாடா வெளியேற்றி பேட்டிங் வரிசையைக் குலைத்தார். அதேநேரம், கேப்டன் ரிஷப் பந்த் ஒரு கேட்சையும், ஒரு ரன்அவுட்டையும் நேற்று தவறவிட்டார்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த அணியில் வில்லியம்ஸன், வார்னர், மணிஷ் பாண்டே ஆகிய 3 பேட்ஸ்மேன்கள்தான் சர்வதேச அளவில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இவர்கள் மூவருமே நேற்று சொதப்பியது அணியின் ஸ்திரத்தன்மையை ஒட்டுமொத்தமாகக் குலைத்தது.

பேர்ஸ்டோ இல்லாத வெற்றிடம் தற்போது சன்ரைசர்ஸ் அணியில் நன்றாகத் தெரிகிறது. பேர்ஸ்டோ இருந்திருந்தால் தொடக்கத்தில் சில ஷாட்களை அடித்து ரன்ரேட்டை உயர்த்தியிருப்பார் ஆனால், அவரின் பணி விருதிமான் சாஹா செய்ய நினைத்து விக்கெட்டைதான் இழந்தார்.

டேவிட் வார்னர் கடந்த ஐபிஎல் தொடருக்குப்பின் இதுவரை எந்தவிதமான போட்டித் தொடரிலும் விளையாடவில்லை, கடந்த தொடரிலேயே ஃபார்ம் இல்லாமல் தவித்த வார்னர் இந்த முறையும் அதேநிலையில்தான் உள்ளார். சிறப்பாக விளையாடக்கூடிய மணிஷ் பாண்டேவும் நேற்று விரைவாக வெளியேறியது சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை உறுதி செய்தது. 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 30 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமது(28), ரஷித் கான்(22) ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 20 ரன்களைக்கூட எட்டமுடியாமல் ஆட்டமிழந்தனர். கேதார் ஜாதவ், ஹோல்டர், மணிஷ் பாண்டே என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியது சன்ரைசர்ஸ் அணியை தோல்விக் குழியில் தள்ளியது.தொடர்ந்து கேதார் ஜாதவ் இதே போல் விளையாடினால் ஐபிஎல் தொடரில் விலைபோகாத சரக்காக மாறிவிடுவார்.

பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் அணி இன்னும் நெருக்கடி கொடுத்திருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.ஆனால், ரஷித் கானைத் தவிர மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களைக் கொடுத்தனர். இதுபோன்ற குறைந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்யும்போது, பந்துவீச்சு துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால், நேற்றையஆட்டத்தில் இல்லை.

135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்விஷா, தவண் அதிரடித் தொடக்கம் அளித்தனர். பிரித்வி ஷா 11 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் கேப்டன் வில்லியம்ஸனிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் அய்யர், தவணுடன் சேர்ந்தார். காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது வழக்கமான ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்தது.

உலகக் கோப்பைக்கு தேர்வாகாவிட்டாலும் தனது இயல்பான பேட்டிங்கை தவண் வெளிப்படுத்தினார். 6பவுண்டரி, ஒரு சிக்ஸர் என தவண் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தொடர்ந்து இந்த சீசனில் அதிக ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை தவண் தக்கவைத்துள்ளார். 2-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், தவண் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களுடனும், ரிஷப் பந்த் 35 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x