Published : 21 Sep 2021 03:03 PM
Last Updated : 21 Sep 2021 03:03 PM

நவம்பர் முதல் ஜூன் வரை; இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம்: சென்னையில் போட்டி

கோப்புப்படம்

புதுடெல்லி

டி20 உலகக் கோப்பை முடிந்தபின் இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டித் தொடர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதில் நவம்பர் முதல் 2022 ஜூன் வரை 14 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதம் முடிந்தபின், அடுத்த சில நாட்களில் இருந்து இந்திய அணியின் போட்டித் தொடர் தொடங்குகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:

''நியூஸிலாந்து அணி நவம்பர் டிசம்பரில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது, அதன்பின் 2022 பிப்ரவரி மாதம் மே.இ.தீவுகள் அணி இந்தியா வருகிறது. 2022 பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கை அணி இந்தியா வந்து விளையாடுகிறது. குறுகிய பயணமாக 2022 ஜூன் மாதம் வரும் தென் ஆப்பிரிக்க அணி டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்கிறது.

நியூஸிலாந்து அணி இந்தியப் பயணத்தை முடித்துச் சென்றபின், இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்கா புறப்படுகின்றனர். அந்நாட்டு அணியுடன் டெஸ்ட், டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் முதல் ஜூனில் நடக்கும்.

நவம்பர்-டிசம்பரில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது, மே.இ.தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

2022 பிப்ரவரி முதல் மார்ச்சில் இந்தியா வரும் இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியுடன் 10 நாட்களில் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்க இருப்பதால், இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் நியூஸிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கான்பூரிலும், மும்பையிலும் நடைபெற உள்ளன. இலங்கை அணியுடன் பெங்களூரு, மொஹாலியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

சுழற்சி முறையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 17 ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக ஜெய்ப்பூர், ராஞ்சி, லக்னோ, விசாகப்பட்டினம், கொல்கத்தா, அகமதாபாத், கட்டாக், திருவனந்தபுரம், சென்னை, ராஜ்கோட், டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன''.

இவ்வாறு பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் சென்னையில் நடக்கும் போட்டி டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x