Last Updated : 21 Sep, 2021 01:17 PM

2  

Published : 21 Sep 2021 01:17 PM
Last Updated : 21 Sep 2021 01:17 PM

பாகிஸ்தான் தொடர் ரத்து: நியூஸிலாந்தைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவிப்பு

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் | கோப்புப் படம்.

லண்டன் 

பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணியுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் பாதுகாப்புக் காரணங்களைக் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் தொடரைக் கடந்த வாரம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, தற்போது இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு விளையாட இருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் ஒருநாள், டி20 தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தன. ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்தத் தொடரை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.

எங்கள் அணியின் மனநல மற்றும் உடல்ரீதியான நலன் மிகவும் முக்கியமானது. அதிகமான முன்னுரிமை கொடுப்போம். ஆனால், தற்போது நாம் மிகுந்த இக்கட்டான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.

இந்தச் சூழலில் கரோனா சூழல், பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றோடு வீரர்களைப் பயணம் செய்ய அனுமதிப்பது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும். பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்ற சூழலை உருவாக்க கடுமையாக உழைத்துவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை, எங்களின் இந்த முடிவு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம்.

கடந்த இரு கோடைக் காலங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு அளித்த ஆதரவையும், நட்பையும் மறக்கமாட்டோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ராவல் பிண்டியில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஒருநாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென தொடரை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வாரியம் ரத்து செய்து, தனது கடமையிலிருந்து தவறியது வருத்தமளிக்கிறது. நாங்களும் கிரிக்கெட் போட்டி நடத்த அல்லாஹ் துணைபுரிவாராக. உலக அளவில் சிறந்த கிரிக்கெட் அணியாக மாறவும், எந்தவிதமான இடையூறின்றி, மன்னிப்பும் கேட்காமல் கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடாக மாற்ற பாகிஸ்தான் அணிக்கு இது விழிப்புணர்வு எச்சரிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x