Last Updated : 21 Sep, 2021 07:59 AM

1  

Published : 21 Sep 2021 07:59 AM
Last Updated : 21 Sep 2021 07:59 AM

கோலிக்கு என்னாச்சு? ஆர்சிபி அணியை சிதைத்த வருண், ரஸல்: கொல்கத்தா ஆதிக்க வெற்றி

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி | படம் உதவி ட்விட்டர்

அபுதாபி


வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழற்பந்துவீச்சு, ரஸலின் துல்லியமானப் பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32-வதுலீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 93 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. முதல்சுற்றில் சிறப்பான வெற்றிகளை ஆர்சிபி பெற்றதால் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளில் பிற அணிகள் பெறும் வெற்றி பாதிக்கக் கூடும்.

3-வது குறைவான ஸ்கோர்

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து, சேர்த்த மிகக் குறைவான 3-வது ஸ்கோர் இதுவாகும். இந்திய டி20 கேப்டன், ஆர்சிபி கேப்டன் ஆகிய இரு பதவிகளையும் இழக்கும் விராட் கோலியின் பேட்டிங்கில் நேற்று உயிர் இல்லாமல், காற்றுப்போன பலூன்போல் இருந்தது.

விராட் கோலியின் பேட்டிங்கில்வழக்கமாக காணப்படும் அந்தப் பரபரப்பு, ஷாட்களை அடிக்கும் வேகம் என எதுவுமே இல்லை. ஒட்டுமொத்தத்தில் சிறகுகளை இழந்த பறவைபோன்றுதான் கோலியின் பேட்டிங்கும், களத்தின் அவரின் செயல்பாடும் இருந்தது.

62 டாட் பந்துகள்

ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 62 டாட்பந்துகளை விட்டுள்ளனர். ஏற்ககுறைய 10 ஓவர்களை அடிக்காமல் மெய்டன் கொடுத்ததற்கு சமமாகும். இதிலிருந்தே ஆர்சிபியின் பேட்டிங் சொதப்பல் தெளிவாகிறது.

கோலிக்கு என்னாச்சு

ஆடுகளம் முதலில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது, பனிப்பொழிவு இருந்தது என்று சப்பைக்கட்டை கோலி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தால், சேஸிங் செய்த கொல்கத்தா அணியின் கில், வெங்கடேஷ் இருவரும் ஆர்சிபி பந்துவீச்சை நொறுக்கி அள்ளிவிட்டனர் என்பதற்குஎன்ன சொல்ல முடியும். ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களால் ஏற்பட்ட தோல்வியாகும்.

ஒரு கேப்டன் களமிறங்கும்போது, வழிகாட்டுபவராக களத்தில் நிலைத்து ஆடுபவராக இருக்க வேண்டும். ஆனால், குழப்பத்துடன் கோலி களமிறங்கிய அவர் ஷாட்களை தேர்வு செய்த ஆடிய விதத்திலேயே தெரிந்தது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி என்பது மறுக்கமுடியாத உண்மைஎன்றாலும், கேப்டன் பதவியிலிருந்து விலகும் அவரின் முடிவு பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

வருண், ரஸல்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் வருண் சக்கரவர்த்தி, ரஸலின் பந்துவீச்சு ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையை உருக்குலைத்தது. 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், 15 டாட்பந்துகளையும்வீசிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை குறிப்பிட்டே தீர வேண்டும். மேக்ஸ்வெலுக்கு வீசப்பட்ட வருணின் பந்து அருமையானது. மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசப்பட்ட பந்து எந்தப் பக்கம் செல்லும் என அறியாவிடாமல் மேக்ஸ்வெல்லை குழப்பி கிளீன் போல்டாக்கினார் வருண் சக்கரவர்த்தி. அடுத்த பந்தில் ஹசரங்காவை கால்காப்பில் வாங்கச் செய்து வெளியேற்றி ஆர்சிபிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை வருண் அளித்தார்.

இவரைத் தவிர்த்து ஆன்ட்ரூ ரஸலின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்தது, 3 ஓவர்கள் வீசிய ரஸல் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 10 டாட் பந்துகள் அடங்கும். அதிலும் ரஸல் தான் வீசிய முதல் ஓவரிலேயே பரத் மற்றும் டிவில்லியர்ஸுக்கு யார்கர் வீசி ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டு ஆட்டமிழக்கச் செய்தது ஆட்டத்தின் திருப்பமுனையாகும்.

பிரசித், பெர்குஷன்

மற்ற வகையில் கொல்கத்தா அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா, பெர்குஷன், சுனில் நரேன் ஆகிய மூவரும் தங்கள் பணியைக் கச்சிதமாகச் செய்தனர். அதிலும் கேப்டன் கோலியை வெளியேற்றி முதல் சரிவை ஏற்படுத்தியது பிரசித் கிருஷ்ணாதான்.

தேவ்தத் படிக்கலை களத்தில் நின்றிருந்தால்கூட ஸ்கோர் உயர்ந்திருத்திருக்கும். ஆனால், தேவ்தத்துக்கு பாடிலைனில் பந்துவீசி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம்கேட்ச்சாக மாற்றி பெர்குஷன் அடுத்த அதிர்ச்சி அளித்தார். இரு விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தபோதே ஆர்சிபி சரிவு தொடங்கியது.

எளிய இலக்கு
92 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளியஇலக்கை துரத்திய கொல்கத்தா அணி திட்டமிட்டு களமிறங்கியது. நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும், விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கில், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

வெங்கடேஷ் அதிரடி

காயத்திலிருந்து மீண்டு வந்த ஷுப்மான் கில் மீண்டும் ஃபார்முக்கு வந்தது போல் சிறப்பாக பேட் செய்தார், அறிமுக வீரரான வெங்கடேஷ் ஐயர் அருமையான ஷாட்களை ஆடி ஆர்சிபி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். முகமதுசிராஜின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரி, ஜேமிஸன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், என அனுபவ வீரர் போல் ஆடினார். நீண்டகாலத்துக்குப்பின் கொல்கத்தா அணிக்கு வலுவான தொடக்க வரிசை கிடைத்துள்ளது, இவர்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்தது.

ஷுப்மான் கில் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் சஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ரஸல் களமிறங்கினார். ஆனால், ரஸலுக்கு எந்த வேலையும் வைக்காமல் வெங்கடேஷ் ஐயரே பணியை முடித்தார். 27 பந்துகளில் 41 ரன்களுடன் வெங்கடேஷ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார், ரஸல் ஒரு பந்துகூடசந்திக்கவில்லை.

3 தூண்கள் சரிந்தன

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகிய 3 வீரர்களுமே சொதப்பிவிட்டனர். கோலி(5), மேக்ஸ்வெல்(10), டிவில்லியர்ஸ்(0) என 3 பெரிய தூண்களுமே சரிந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம்.

சிறகுகளை இழந்த பறவை

விராட் கோலியின் கேப்டன் பதவி பறிபோகப் போகிறது என்ற விஷயமே அவரின் பாதிபலத்தை குறைத்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது. அருமையான கவர்டிரைவ் மூலம் பவுண்டரி அடித்து கணக்கை தொடங்கிய கோலி, பிரசித்கிருஷ்ணா பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

கோலி கால்காப்பில் வாங்கியபோது அவரின் பேட்டிங் ஆக் ஷனும், பந்தைக் கணித்தவிதமும் தவறாக இருந்தது என்பதை வர்ணனையாளர் விரிவாகக் கூறினர். இதிலிருந்தே கோலி குழப்பத்துடன் களத்துக்குள் வந்துள்ளதை அறியமுடிகிறது.

மேக்ஸ்வெல் விரக்தி

ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமே படிக்கல் அடித்த 22 ரன்கள்தான், மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சொல்லும்படியாக ஸ்கோர் செய்யவில்லை. பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை ஆர்சிபி அணி சேர்த்திருந்தது.

மேக்ஸ்வெல் 17 பந்துகளைச் சந்தித்தும் ஒரு ஷாட்கூட அவருக்கு மீட் ஆகவில்லை. ஒருமுறை வெறுப்புடன் பேட்டை தூக்கி வீசி எறிந்து மேக்ஸ்வெல்தனது விரக்தியை வெளிப்படுத்தினார். ஷாட் மீட் ஆகாத எரிச்சலில் வருண் பந்தை கணித்து ஆடமுடியாமல் மேக்ஸ்வெல் கிளீ்ன் போல்டாகினார்.

ஏபிடி ஏமாற்றம்

ஆர்சிபி கோட்டை சரியும்போதெல்லாம் தூக்கி நிறுத்துபவர் ஏபிடி. பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து ஃபார்மில் இருந்த டிவில்லியர்ஸ் ஆர்சிபிக்கு துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்தவேகத்தில் ரஸல் பந்தில் க்ளீன் யார்கரில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஏபிடி வெளியேறியபோதே ஆர்சிபி கதைமுடிந்துவிட்டது என்று ரசிகர்கள் ஊகிக்கத் தொடங்கினர்.

மற்ற வகையில் பரத், சசசின் பேபி, ஹசரங்காவுக்கு வாய்ப்புக் கிடைத்தும் யாரும் நிலைத்து பேட் செய்யவில்லை. 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி, அடுத்த 41 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்ததை என்னவென்று சொல்வது. அதிலும், ரஸல் வீசிய 9-வது ஓவரில் இரு விக்கெட்டுகள், வருண் வீசிய 12-வது ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்தத்தில் 19 ஓவர்களில் 92 ரன்களில் ஆர்சிபி கதை முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x