Last Updated : 16 Sep, 2021 10:28 AM

 

Published : 16 Sep 2021 10:28 AM
Last Updated : 16 Sep 2021 10:28 AM

கரீபியன் லீக் டி20: பிராவோவின் பேட்ரியாட்ஸ் அணி முதல் முறையாகச் சாம்பியன்: கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி

கரீபியன் லீக் டி20 தொடரில் முதலமுறையாக சாம்பியன் பட்டம் வென்ற நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியினர் | படம் உதவி ட்விட்டர்

செயின்ட் கிட்ஸ்


டோமினிக் டிரேக்கின் அதிரடி ஆட்டத்தால் செயின்ட்கிட்ஸில் நேற்று நடந்த கரிபீயின் லீக் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அணியை 3 விக்கெட் வி்த்தியாசத்தில் வீழ்த்தி நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்ெகட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுவைன் பிராவோ தலைமையிலான நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, இவின் லூயிஸ் ஆகியோர் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை அரையிறுதிக்கு அழைத்துவந்த நிலையில் இளம் வீரர்களான டோமினிக் ட்ரேக்ஸ், ஜோஷ்வா டா சில்வா, ஃபேபியன் ஆலன், ஷெர்பானே ரூதர்போர்ட் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் பங்களிப்புச்செய்து சாம்பியன் பட்டம் வெல்ல துணை செய்தனர்.

நெவிஸ் பேட்ரிாயட்ஸ் அணியின் நடுவரிசை வீரர் டோமினிக் ட்ரேக்ஸ் 24 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து இறுதி ஆட்டமிழக்காமல் இருந்து கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் ட்ரேக்ஸ் வென்றார், தொடர் நாயகன் விருது ரஸ்டன் சேஸுக்கு வழங்கப்பட்டது.
ஜோஷ்வா டா சில்வா(37), ரூதர்போர்ட்(25) ரன்கள் சேர்த்து வெற்றிக்கு குறிப்பிடத்தக்க காரணமாக அமைந்தனர்.

160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பேட்ரியாட்ஸ் அணி களமிறங்கி ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 5 விக்ெகட் இழப்புக்கு 95 ரன்கள் என்று தோல்வியின் பிடியில் இருந்தது. கெயில்(0), லூயிஸ்(6), பிராவோ(8), ரூதர்போர்ட்(25), டா சில்வா(37) ஆகியோர் வீழ்ந்த நிலையில் தோல்வியை நோக்கி அணி தள்ளப்பட்டது.

ஆனால், நடுவரிசை பேட்ஸ்மேன் டோமினிக் ட்ரேக் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தோல்வியிலிருந்து அணியை மீட்டார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. வகாப் ரியாஸ், வீஸ் பந்துவீச்சில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் டிரேக்ஸ் விளாச அணியை வெற்றியை நோக்கி நகர்ந்தது. ட்ரேக்ஸ், ஃபேபியன் ஆலன் இருவரின் ஆட்டம் செயின்ட் லூசியா அணிக்கு கிலியை ஏற்படுத்தியது.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 31ரன்கள் தேவைப்பட்டது. வகாப் ரியாஸ் வீசிய 19-வது ஓவரில் ஆலன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து காட்ரெல் களமிறங்கினார். மனம் தளராமல் ஆடிய ட்ரேக்ஸ் அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்தி சிக்ஸர்,பவுண்டரி விளாசினார். அதே ஓவரில் காட்ரெல் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் பேட்ரியாட்ஸ் அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. நஷீம் ஷா, ட்ரேக்ஸ் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை வில்லியம்ஸ் வீசினார். முதல் பந்தில் ட்ரேக்ஸ் ஒரு ரன்னும், 2-வது பந்தில் நஷீம் ஒரு ரன்னும் எடுத்தனர். 3-வது பந்தில் ட்ரேக் ரன் ஏதும் எடுக்கவில்லை.

4-வது பந்தில் ட்ரேக் 2 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் ட்ரேக் பவுண்டரி விளாச ஆட்டம் பரபரப்புக்கு வந்தது. கடைசிப்பந்தில் பேட்ரியாட்ஸ் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. வில்லிய்ஸ் யார்கராக வீச, அதை ட்ரேக்ஸ் தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

ஆட்டநேர முடிவில் ட்ரேக்ஸ் 48 ரன்களுடனும்(3சிக்ஸர்,3பவுண்டரி), நஷீம் ஒரு ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். செயின்ட் லூசியா அணித் தரப்பில் வகாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும், சேஸ், ஜோஸப், வீஸ்தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக முதலில் பேட் செய்த செயின் லூசியா அணியில் கார்ன்வெல்(43), ரஸ்டன் சேஸ்(43) ரன்களும் சேர்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x