Published : 15 Feb 2016 02:50 PM
Last Updated : 15 Feb 2016 02:50 PM
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றதையடுத்து குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு சவாலான அணியே என்று தோனி தெரிவித்துள்ளார்.
தோனி கூறியதாவது:
குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்போதுமே சவாலாகத் திகழ்கிறது. மேலும் உலகக் கோப்பையும் இங்கேயே நடைபெறுவதால், ஸ்பின்னர்களின் ஆதிக்கம் இருக்கும். இது நமக்கு கூடுதல் பலம் அளிக்கும்.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இங்கு நீண்ட காலமாக ஆடி வருவதும் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு நம் அணி வீரர்கள் தயாராகவே இருப்பதால் இந்திய அணி வரும் உலகக்கோப்பையில் சவாலான அணியாக திகழும்.
குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்து விடுகிறது. அதாவது இதில் எதிரணியினரின் பெரிய ஹிட்டர்களை விரைவில் வீழ்த்தி அனுப்புவது முக்கியம். மேலும் நாக்-அவுட் போட்டியில் நம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். நாக் அவுட் சுற்று தொடங்கி விட்டாலே அது ஒரு விதத்தில் ‘லாட்டரி கிரிக்கெட்’ ஆட்டமே. சீரான முறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம்.
அணியில் ஒவ்வொருவருக்கும் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை, இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகிறோம். இதனால் 6, 7, 8,-ம் நிலைகளில் இறங்குபவர்கள் பெரும்பாலும் எடுத்த எடுப்பிலேயே பெரிய ஷாட்களை ஆட ரிஸ்க் எடுக்க வேண்டியுள்ளது.
அந்த இடத்தில் 3 அல்லது 4 பந்துகள் கிடைத்தால் கூட அதில் 10-12 ரன்களை எடுக்கப்பார்ப்பதுதான் பலன் அளிக்கும். ஒட்டுமொத்தமாக அணி நன்றாக உள்ளது இன்னும் கூடுதல் வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
புதிய பந்தை கையாள்வதில் அஸ்வின் அபாரமாகத் திகழ்கிறார். அதுவும் 7 வீரர்கள் வட்டத்துக்குள் நிற்கும் போது அவர் பந்துகளை பிளைட் செய்ய தயங்குவதில்லை, இதனால் பேட்ஸ்மென்கள் மேலேறி வந்து அடிக்க அவர் தூண்டுகிறார், இந்தத் தருணத்தில் பலரும் பிளைட் செய்யாமல் வேகமாக வீசுவதையே விரும்புவர், ஆனால் அஸ்வின் பிளைட் செய்யத் தயங்குவதில்லை, அவர் இரண்டையும் அழகாகக் கலந்து வீசுகிறார்.
அவர் தொடக்கத்தில் சிறப்பாக வீசுவதால் வேகப்பந்து வீச்சாளர்களை நடு ஓவர்களில் பயன்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறார். ஆனால் எதிரணியினரிடத்தில் எவ்வளவு வலது கை வீரர்கள் உள்ளனர், எவ்வளவு இடது கை வீரர்கள் உள்ளனர், எதிரணியினர் யார் என்பதைப் பொறுத்து உத்திகள் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
சுரேஷ் ரெய்னாவும் ஆஃப் ஸ்பின் வீசுவதால் இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள், யுவராஜ், ஜடேஜா வகையில் 2 இடது கைஸ்பின்னர்கள் உள்ளனர், எனவே ஒரு ஸ்பின்னரை தொடக்க ஓவர்களில் பயன்படுத்தினாலும் நம்மிடையே மற்ற தெரிவுகள் உள்ளன.
எனவே இத்தகைய முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT