Published : 13 Sep 2021 07:46 AM
Last Updated : 13 Sep 2021 07:46 AM
நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று 52 ஆண்டுகளுக்குப்பின் சாதனைப் படைப்பார் ஜோக்கோவிச் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைத் தவறவிட்டார். கடைசியாக கடந்த 1969ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ரோட் ரேவர் மட்டும்தான் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார்.
அதன்பின் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒருவர் கூட வென்றது கிடையாது. இந்த முறை ஜோக்கோவிச் அந்தசாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவறவிட்டார். மகளிர் பிரிவில் 1988ம் ஆண்டு ஸ்டெபி கிராஃப்புக்குப்பின் எந்த வீராங்கனையும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றது இல்லை.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான ஜோக்கோவிச்சை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்.
ரஷ்ய வீரர் மெத்வதேவுக்கு இதுதான் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டமாகும். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சுடன் மோதி அதில் தோல்வி அடைந்தார் மெத்வதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டில் இதுவரை 27 போட்டித் தொடர்களில் ஜோக்கோ்விச் விளையாடி வென்றுள்ளார், இதில் 4 கிராண்ட்ஸ்லாம்களும் அடங்கும். இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன், ஜூன் மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் ஆகியவற்றில் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். யுஎஸ் ஓபனிலும் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோக்கோவிச் தோல்வி அடைந்தார்.
இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நடால், பெடரர் ஆகியோரின் சாதனையை ஜோக்கோவிச் சமன் செய்திருந்தார். யுஎஸ் ஓபன் பட்டத்தை ஜோக்கோவிச் வென்றிருந்தால் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும் அதைத் தவறவிட்டார்.
34 வயதான ஜோக்கோவிச் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பல்வேறு தவறுகளை சர்வீஸ்களிலும், பந்தைத் திருப்பி அனுப்புவதிலும் செய்தார், ஒட்டுமொத்தமாக 38 தவறுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குறித்த இடத்தில் பந்தை ப்ளேஸ் செய்ய முடியவில்லை, பந்தை வேகமாகவும் திருப்பி அனுப்ப முடியாமல் திணறினார், எந்தவிதமான பிரேக் புள்ளிகளையும் பெற இயலவில்லை.
இதுவரை ஒரே ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கடந்த 1933ம் ஆண்டில் ஜேக் கிராபோர்ட், 1956ம் ஆண்டில் லீ ஹோட் ஆகியோர் வென்றுள்ளனர் அவர்களுடன் ஜோக்கோவிச் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT