Published : 14 Jun 2014 09:17 AM
Last Updated : 14 Jun 2014 09:17 AM

சிலியிடம் ஆஸ்திரேலியா போராடித் தோல்வி

உலகக் கோப்பைக் கால்பந்து பிரிவு பி போட்டியில் சிலி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.

ஆட்டம் தொடங்கி முதல் 15 நிமிடங்களிலேயே சிலி தனது அதிவேக ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து அதிர்ச்சியளித்தது.

சிலி வீரர்கள் அலெக்சிஸ் சாஞ்சேஸ் 12வது நிமிடத்திலும், ஜோர்கே வால்டிவியா 14வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர்.

சிலியின் ஆட்டம் உத்வேகத்துடன் இருக்க ஆஸ்திரேலியாவின் ஆட்டமோ நிழல்களைத் துரத்தியபடி இருந்தது.

12வது நிமிடத்தில் வலது பக்கத்தில் சாஞ்சேஸ், சார்லஸ் அராங்குயிஸுடன் கூட்டணி சேர்ந்தார். ஆராங்குயிஸ் அபாரமாக ஒரு பாஸை பெனால்டி பகுதிக்குள் செய்ய, எட்வர்டோ வார்கஸ் அதனைத் தலையால் முட்டி சான்சேஸிடம் அளிக்க அவர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரியானைத் தாண்டி முதல் கோலை அடித்தார்.

2 நிமிடங்கள் கழித்து மீண்டும் சான்சேஸ், ஜோர்கே வால்டீவியாவுக்கு பாஸ் செய்ய அங்கு நிறைய இடம் அவருக்கு இருந்தது. நெருக்கடி இல்லை. வந்த பந்தை வால்டீவியா தூக்கி அடித்து கோலாக மாற்றினார். சிலி 2-0 என்று முன்னிலை பெற்றது.

ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியா ஓரளவுக்கு ஆட்டத்தின் போக்கைப் பிடித்துக் கொண்டது. இருப்பினும் வால்டீவியா, சான்சேஸ் மரூசியோ இஸ்லா ஆகியோர் கூட்டணி 3வது கோலை அடிக்க முயன்றது. ஆனால் பந்து வெளியே சென்றது.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் இவான் ஃபிராஞ்சிக் கடுமையான ஒரு போராட்டத்திற்குப் பிறகு பந்தை தூக்கி அடித்தார். அங்கு ஆஸ்திரேலியாவின் காஹில், சிலி வீரர் கேரி மெடலை நன்றாக இடையூறு செய்து எம்பி தலையால் முட்டி ஆஸ்திரேலியாவுக்கு அரிதான முதல் கோலை பெற்றுத் தந்தார்.

இடைவேளைக்குப் பிறகும் அதே போல் தலையால் முட்டி கோலை நோக்கி அடித்தார் காஹில் ஆனால் பந்து வெளியே சென்றது. அவர் சிலி தடுப்பாட்ட வீரர் கொன்சாலோ ஜாரா தன் சட்டையைப் பிடித்து இழுத்ததாக முறையீடு செய்தார். அதனால் பயனில்லை.

மீண்டும் காஹில், சக வீரர் லெக்கி அடித்த ஷாட்டை கோலாக மாற்றினார். ஆனால் அது ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பிறகு ஆஸ்திரேலிய வீரர் மார்க் பிரெஸியானோ கோல் அடிப்பதற்கு மிக அருகில் வந்தார். ஆனால் சிலி கோல் கீப்பர் பிராவோ அதனைத் தட்டி விட்டார். தட்டி விட்ட பந்தை மீண்டும் அடித்த போது அது பக்கவாட்டு வலையை மோதியதே தவிர கோலாகவில்லை.

ஆட்டத்தின் இந்தக் கட்டத்தில் ஆஸ்திரேலியா மிக அற்புதமாக ஆடி, சிலி வீரர்களிடையே டென்ஷன் அதிகரித்தது. ஒருநேரத்தில் ஆஸ்திரேலியாவின் பிரெஸ்கியானோ, காஹில், லெக்கி ஆகியோர் சிலியின் தடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமான தருணங்களை அளித்தனர்.

ஆனால் சமனிலை எய்தும் கோல் வரவேயில்லை. ஆட்டம் முடியும் தறுவாயில் சிலி வீரர் ஜான் பியூஸ்ஜோ 3வது கோலை அடித்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை ஒருவரும் குறை கூறுவதற்கில்லை. அனுபவமற்ற ஆஸ்திரேலியாவின் இந்த அணி சிலியிற்கு கடுமையான சவாலாகத் திகழ்ந்தது என்பது மிகையானது அல்ல. இது போராடித் தோல்வி தழுவிய ஆட்டங்களில் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x