Published : 11 Sep 2021 07:27 PM
Last Updated : 11 Sep 2021 07:27 PM
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதில் தோனி டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டுமே ஆலோசகராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜாம்பவான் கபில் தேவ் பங்கேற்றார். அப்போது அவரிடம் தோனிக்கு பிசிசிஐ வழங்கிய புதிய பதவி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கபில் தேவ் அளித்த பதில்:
“இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக உலகக் கோப்பைக்கு மட்டும் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஓய்வுபெற்று ஓராண்டுக்குள் மீண்டும் தேசியக் கடமைக்குள் தோனி வந்திருப்பது ஸ்பெஷலானது. என்னைப் பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றுவிட்டால், அவர் ஓய்வுபெற்று 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் மீண்டும் கிரிக்கெட் நீரோட்டத்துக்குள் வந்துவிட வேண்டும். ஆனால், தோனி இதில் வித்தியாசமானவர்.
இன்றைய கிரிக்கெட் வீரர்களின் சிந்தனை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இளம் கிரிக்கெட் வீரர்களிடம் நான் ஏதாவது சொல்லியிருக்கிறேன் என்றால், அது அதிகமாக ஓடுங்கள் என்பதுதான். அப்போதுதான் தசைகள் வலுவடையும். வலைப்பயிற்சியில் முடிந்த அளவு அதிக நேரம் பந்து வீசுங்கள். நீங்கள் டி20 போட்டிக்கு ஏற்ப 4 ஓவர்கள் மட்டும் வீசும் பந்துவீச்சாளராக இருந்தால், அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக முடியும்.
விளையாடும்போது காயம் வரும், போகும். ஆனால், வலைப்பயிற்சியில் அதிகமான ஓவர்கள் பந்துவீசும்போதுதான் தசைகள் வலுவடையும். இது மிக மிக முக்கியம். இன்றைய கிரிக்கெட் வீரர்கள் அதிகமான நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார்கள். உடற்பயிற்சிக் கூடம் என்பது மாற்றுவழியாகத்தான் இருக்க வேண்டும்,
அதாவது மழைக் காலத்தில் நம்மால் பயிற்சியில் ஈடுபட முடியாத நேரத்தில் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லலாம். ஆனால், தினந்தோறும் ஓடுவதைத் தவிர சிறந்த உடற்பயிற்சி இருக்கும் என நான் நினைக்கவில்லை. அப்போதுதான் நாம் போட்டியின்போது காயம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்க முடியும்''.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT