Last Updated : 11 Sep, 2021 04:43 PM

 

Published : 11 Sep 2021 04:43 PM
Last Updated : 11 Sep 2021 04:43 PM

இந்திய அணிக்குள் கரோனாவுக்குக் காரணமான நூல் வெளியீட்டு விழா: ரவி சாஸ்திரியுடன், கோலி, இங்கிலாந்து வாரியத் தலைவரும் பங்கேற்பு

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி | கோப்புப்படம்

லண்டன்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உடற்பயிற்சி நிபுணர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்படக் காரணமாக இருந்த நூல் வெளியீட்டு விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி லண்டனில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பங்கேற்றார். அந்தப் புத்தக விழாவுக்குச் சென்றுவந்த 2 நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருடன் நெருக்கமாக இருந்ததற்காக பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்க இருந்த நேரத்தில் இந்திய அணியின் பிசியோ யோகேஷ் பராமருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஆட்டம் காலவரையின்றித் தள்ளி வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கேப்டன் கோலி, ரவி சாஸ்திரி | படம் உதவி: ட்விட்டர்

ஆனால், இந்திய அணிக்குள் கரோனா பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 4 போட்டிகளாக தீவிரமான பயோ-பபுள் சூழலுக்குள் வீரர்கள், ஊழியர்கள் இருந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அனைவரும் பயோ-பபுள் சூழலை மீறியது தெரியவந்துள்ளது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பயோ-பபுள் சூழலை மீறிப் புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றுவந்து அணிக்குள் கரோனாவைப் பரப்பிவிட்டார். மேலும், மான்செஸ்டர் நகரில் இந்திய வீரர்கள் அனைவரும் எந்தவிதமான பயோ-பபுள் சூழலையும் மதிக்காமல் வெளியே நடமாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரவி சாஸ்திரி பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முக்கிய விஐபி கூறுகையில், “கடந்த மாதம் 31-ம் தேதி நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் பயிற்சியாளர், வீரர்களைச் சந்திக்கச் சென்று இருந்தேன். ஆனால், சிறிய அளவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 150 பேர் விழாவில் பங்கேற்றனர். ஆனால், சர்வீஸ் செய்யும் வேலையாட்கள் தவிர ஒருவரின் முகத்திலும் முகக்கவசம் இல்லாமல் இருந்தது எனக்கு அதிர்ச்சியளித்தது. இதில் முகக்கவசம் அணியாமல் பலரும் ரவி சாஸ்திரியுடன் பேசியதும் எனக்கு வியப்பை அளித்தது. இதைப் பார்த்து எனக்கு வித்தியாசமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிஸன்

இதற்கிடையே இந்த நூல் வெளியீட்டு விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிஸனும் பங்கேற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், ஹாரிஸனுக்கு இதுவரை கரோனா தொற்று ஏற்படவில்லை.

இந்திய அணிக்குள் கரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ அதிகாரிகளில் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ ஒருவர் செய்யும் தவறு அனைவருக்கும் சிரமத்தைக் கொடுக்கிறது. பயிற்சியாளர், கேப்டன் இருவரும் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியால்தான் கரோனா தொற்று அணிக்குள் வந்துள்ளது. இது அச்சமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x