Published : 07 Sep 2021 01:53 PM
Last Updated : 07 Sep 2021 01:53 PM
இந்திய அணித் தேர்வு குறித்தும், மற்ற முட்டாள்தனங்கள் குறித்தும் கவலைப்படுவது குறித்து முதலில் நிறுத்துங்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி வீரருமான ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய அஸ்வினுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஒன்றில் கூட கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கவில்லை.
உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
ஆனால், ஜடேஜாவுக்கு மட்டும் தொடர்ந்து கேப்டன் கோலி வாய்ப்புகள் வழங்குவது குறித்து விவாதங்கள் எழுந்தன.
ஆனால், மூத்த பந்துவீச்சாளர்கள் அஸ்வின், இசாந்த் சர்மா, ஷமி இல்லாமல் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை 4-வது டெஸ்ட்டில் வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இதில் ஜடேஜா தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஸ்வின் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சிப்பவர்களுக்கு மறைமுகமாக டிவில்லியர்ஸ் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கேப்டன் கோலிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “டெஸ்ட் கிரிக்கெட் பார்வையாளர்கள், அணித் தேர்வு குறித்தும், பிற முட்டாள்தனங்கள் குறித்தும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.
போட்டியை, உத்வேகத்தை, திறமையை, தேசப்பற்றை ஊக்கப்படுத்துவதைத் தொடங்குங்கள். நல்ல போட்டியை நீங்கள் இழக்கிறீர்கள்.
இந்திய அணி சிறப்பாக விளையாடியது, கேப்டன் கோலி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். சில வீரர்களிடம் இருந்து அபார திறமை, துணிச்சல் வெளிப்பட்டது.
இங்கிலாந்து கேப்டன் ரூட் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து வீரர்களும் நன்றாக விளையாடினர். சிறந்த போட்டிக்கு மிகப்பெரிய விளம்பரம். இறுதிப் போட்டிக்குக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT